மக்களை பீதியடைய வைக்கும் மோடியின் ‘கோவிட்’ பேச்சு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவிட் காலத்தை போல என பிரதமர் மோடி பேசியதைக் கேட்டு மக்கள் பீதியில் உள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி

இஸ்ரேல், அமெரிக்கா- ஈரான் இடையே 3 வாரங்களுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கு ஆசிய போரால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், கொரோனா காலம்போல் சவால்களை சந்திக்கத் தயாராக இருங்கள் என்று மக்களவையில் பிரதமர் மோடி பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சு இந்திய மக்கள் மத்தியில், கொரோனா போன்ற நெருக்கடி காலம் உருவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் இன்று (மார்ச் 25) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “ ‘கோவிட் காலத்தைப் போல’ என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பாஜக அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை ஸ்கிரிப்டை தற்போது கையிலெடுத்துள்ளது.பாஜக ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அதிமுகவோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள்.

சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. ‘இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பாஜக அரசு என்ன செய்கிறது?; என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *