இனி ஒரு உயிரும் போகக் கூடாது… சிவா திலீபன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சிவா திலீபன்

இந்தி திணிப்புக்கு எதிராக ரயில் முன் பாய்ந்ததில் உயிரிழந்த சிவா திலீபனின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்
தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் நிலையங்களின் இந்தி மொழியில் பெயர் பலகை வைக்கப்பட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், மார்ச் 11-ம் தேதி மொழிப்போர் தியாகி தாளமுத்து நினைவு நாளை முன்னிட்டு, மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தலைமையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை கருப்பு பெயிண்ட் கொண்டு மறைத்து இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த சிவா திலீபன்
இதை ரயில்வே போலீஸார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மே 17 இயக்கத்தினருக்கும், ரயில்வே போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிவா திலீபன் என்பவர், ‘தமிழ் வாழ்க’ என்று முழங்கியவாறு திடீரென ரயில்முன் பாய்ந்தார். இதில் அவர் ரயில் மோதி படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்
சிவா திலீபன் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில்,“இனி ஒரு உயிரும் போகவேண்டாம். இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு ரயில் முன் பாய்ந்த சகோதரர் சிவா திலீபன் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது. மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்!

இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். சகோதரர் சிவா திலீபன் அவர்களை இழந்து வாடும் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் – தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *