மானாமதுரை பட்டியலின இளைஞர் லாக்கப் மரணம்… வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

மானாமதுரை பட்டியலின இளைஞர் ஆகாஷ் மரணம் தொடர்பான விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில்வே காலனி பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜீவா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் ஆதனூரை சேர்ந்த அழகர் ஆகியோரை பட்டாகத்தி மற்றும் அரிவாளால் தாக்கிய சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த வழக்கில் தொடர்புடையதாக ஆகாஷ் டெலிசன் (26) என்ற பட்டியலின இளைஞரை மானாமதுரை போலீஸார் பிடிக்க முயன்றனர். அப்போது, ஆகாஷ் மேலபசலை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றதாகவும், அதில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால், காயமடைந்த ஆகாஷ் டெலிசனுக்கு முதலில் மானாமதுரை அரசு மருத்துவமனையிலும், பின்னர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆகாஷ் டெலிசனுக்கு நேற்று நள்ளிரவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததார். அவருடன் கைது செய்யப்பட்ட 4 பேர் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே ஆகாஷின் மரணத்துக்கு காவல்துறையின் சித்ரவதையே காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் நேற்று காலை முதல், காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து ஆகாஷ் மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *