காங்கிரஸில் இருந்து நீக்கப்படுகிறாரா மாணிக்கம் தாகூர்?: ட்விட்டால் பரபரப்பு

மாணிக்கம் தாகூர் எம்.பி

மாணிக்கம் தாகூர் எம்.பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அச்சமில்லை என்று தனது எக்ஸ் தளத்தில் மாணிக்கம் தாகூர் ட்விட் செய்துள்ளார்.

திமுக கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதே போல பிரவீன் சக்கரவர்த்தியும் திமுகவிற்கு எதிராக கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். இது திமுக தலைவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி, “எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் (திமுக) அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதுதான். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம்” என்று பேசியது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து திமுகவுடனான கூட்டணியை சீர்குலைக்கும் வகையில் பேசிவரும் மாணிக்கம் தாகூர் எம்.பி. மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கொடுத்துள்ளார். பெங்களூருவில் மல்லிகார்ஜூன கார்கேவை செல்வப்பெருந்தகை நேற்று சந்தித்து ஒரு அறிக்கையை அளித்தார். அதில், கட்சி மேலிட உத்தரவை மீறி பேசி வரும் மாணிக்கம் தாகூர் எம்.பி மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான அறிக்கையை கார்கேவிடம் செல்வப்பெருந்தகை கொடுத்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்ப தில்லையே’ என்ற பாரதியாரின் வரிகளை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இது காங்கிரஸார் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *