‘வீழ்வேன் என்று நினைத்தாயோ?’- காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடும் மாணிக்கம் தாகூர்!

மாணிக்கம் தாகூர் எம்.பி

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபாலுக்கு சவால் விடும் வகையில் மாணிக்கம் தாகூர் எம்.பி பதிவை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்.பி, ஜோதிமணி எம்.பி ஆகியோர் திமுகவிற்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வழியில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து விட்டார்.

இந்த நிலையில், கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி தலைமையிடம் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் கொடுத்திருந்தார். இதனையடுத்து மாநில தலைவர்கள் உள்பட யாருக்கும் கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க உரிமை கிடையாது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் எச்சரித்துள்ளார். மேலும், மாணிக்கம் தாகூர் எம்.பி பொதுவெளியில் கூட்டணி கட்சி குறித்து விமர்சனம் செய்யக்கூடாது என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், பாரதியாரின் கவிதையை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

” காலை வணக்கம்.
தேடிச்சோறு நிதம் தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பம் மிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போல நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ?” என்று கூறப்பட்டுள்ளது. நேற்று, அச்சமில்லை, அச்சமில்லை என்று மகாகவி பாரதியின் பாடலை நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் மாணிக்கம் தாகூர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *