ஒரு கதை 2 – நட்சத்திரக் குழந்தைகள்!

ம.மணிமாறன் எழுதும் தடம் பதித்த சிறுதைகள் குறித்த தொடர்…

குழந்தைகளோடு பேசுவது அவ்வளவு ஒன்றும் எளிதான செயலில்லை. பள்ளிக்கூடத்தின் வகுப்பறைக்குள் மிதமிஞ்சிய ஆசிரியரின் அதிகாரம் எப்போதிருந்து எப்படி அங்கு வந்து சேர்ந்திருக்கும். இது அதிகாரம் எனும் தந்திரம் குறித்த தத்துவ விவாதங்களில் மிக முக்கியமான விவாதப் பொருளாகி இருக்கிறது. குழந்தைகள் விடாமல் கேள்வி கேட்பவர்கள். பெரியவர்கள் சொல்லும் பதில்களில் எந்த திருப்தியும் அடையாதவர்கள். நீங்கள் சொன்ன பதிலில் இருந்து புதிய கேள்விகள் முளைக்கும்.. பதில் தெரியாத கேள்விகளால் பெரியவர்கள் திணறிப் போவதும், அவர்கள் அடுத்தடுத்த கேள்விகளை நோக்கி நகர்வதும் குழந்தைகளுக்கு ஒரு நூதனமான விளையாட்டு. இந்த விளையாட்டின் சுவாரஸ்யத்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய வகுப்பறைகள் கண்டடைந்த தந்திரம்தான் கையைக் கட்டு,வாயைப் பொத்து.

இது உலகின் எல்லா மொழிகளிலும் உச்சரிக்கப்படுகிற அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான சொல்லாடல். ஸெட்அப் அன் சிட்டவுன் எனும் சொற்றொடரை எதிர்கொள்ளாத குழந்தை ஏதாவது இருக்குமா இந்த உலகத்தில். வீடுகளில் தாயும்,தகப்பனும் குழந்தைகளோடு பேசுகிறார்களா? பேசுவார்கள். கொஞ்சுவார்கள். இது எல்லாம் அவர்களுக்கு பள்ளிக்கூட வயது எட்டும்வரை மட்டுமே. எப்படா இவனை அல்லது இவளை பள்ளிக்கூடத்தில கொண்டு போய் விடனும்னு தவியா தவிக்கும் பெற்றோரின் உளவியல் தனித்துப் பேச வேண்டியது. ஒரு கதை சொல்லப்பட்ட அதே தொனியில் வாசகனுக்குள் சேகரமாவதில்லை. அது அவருடைய மனத்திரையில் அவரே அறியாத சில பக்கங்களைத் திறக்கும். மேற்சொன்ன வரிகள் யாவும் ஒரு கதை திறந்தவையே.

பி.எஸ்.ராமையா

மணிக்கொடி
பி.எஸ்.ராமையா தன்னுடைய கதை ஒன்றில் மேற்கண்ட பல கேள்விகளுக்கான தர்க்கங்களை, வியாக்கியானங்களை உருவாக்கியிருப்பார். பி.எஸ்.ராமையா மணிக்கொடியில் ஆசிரியராக இருந்த காலம்தான் தமிழ்ச் சிறுகதைகளின் பொற்காலம். அவருடைய ஆசிரியத்துவத்தில்தான் புதுமைப்பித்தன், மௌனி,கு.ப.ரா போன்ற தமிழ்ச் சிறுகதைகளின் மேதைகள் அவர்களுடைய பல கதைகளை எழுதியுள்ளனர்.

எம்.வி.வெங்கட்ராம் தன்னுடைய இலக்கிய நண்பர்கள் எனும் கட்டுரையில் மௌனியின் பல கதைகளுக்கு தலைப்பிட்டவர். பல சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளை செப்பனிட்டு திருத்தி வடிவமைத்தவர் பி.எஸ்.ஆர்.என்கிறார். முன்னூறுக்கும் மேலான கதைகளை எழுதியிருக்கும் பி.எஸ். ராமையாவை மணிக்கொடி ஆசிரியர் எனும் சிமிழுக்குள் அடைப்பது ஒரு தந்திரம். அவருடைய மேதமைகள் வெளிப்பட்ட பல சிறுகதைகள் இருக்கின்றன. நட்சத்திரக் குழந்தைகள் எனும் பி.எஸ்.ராமையாவின் சிறுகதை அவருடைய சிறந்த சிறுகதைகளில் ஒன்று மட்டுமல்ல. உலகின் மகத்தான சிறுகதைகளில் ஒன்று.

மணிக்கொடி இதழ்,

கதையை உரையாடல் வழியே நடத்துவதற்கு தனித்திறன் தேவை. எழுத்தாளர் ‘நட்சத்திரக் குழந்தைகள்’ எனும் கதையில் முதல்வரி துவங்கி கதை முடிவடையும் வரை அப்பாவும் மகளும் பேசிக்கொள்வதாக அமைத்திருக்கிறார். கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான பெயர் வைப்பதும்கூட மிகவும் முக்கியம். பி.எஸ். ராமையா தன்னுடைய நட்சத்திரக் குழந்தைக்கு ரோஹிணி எனப்பெயர் வைக்கிறார்.

“அப்பா நட்சத்திரத்திற்கு அப்பா உண்டா?
‘நிச்சயமாக உண்டு’. நட்சத்திரங்களுக்கு அப்பா, சுவாமி ‘
சுவாமியா? அவர் உன்னைப் போலவே அழகாக இருப்பாரா?
அவர் கடவுளாச்சே. பேரழகுடன் இருப்பார்.

அப்பாடி பதில் சொல்லிவிட்டோம் என்று பெரியவர்கள் நினைக்கத்துவங்கிய அடுத்த நொடியில் புதிய கேள்விகளுடன் வந்து நிற்பர் குழந்தைகள். குழந்தையின் அடுத்த கேள்வி இப்படி துவங்குகிறது.
“ சரி அழகான அந்த கடவுள் எப்போது நட்சத்திரத்தை உருவாக்குவார்?.
“பொழுது சாயுங்காலம்..இன்னும் உரையாடல் முடியவில்லை. அடுத்த கேள்வி ‘நட்சத்திரங்களை எப்படி கடவுள் உருவாக்கினார்?’.

ஆறுவயது குழந்தைக்கு அறிவியல் விளக்கம் எதனையும் சொல்லவில்லை தந்தை. தடுமாறுகிறார். குழந்தைகளின் முன்பாக தடுமாறி நிற்கும் பெற்றோர்களின் சித்திரத்தை யோசியுங்கள். இந்தக் கதையை கவனித்துக் கொண்டிருக்கும் நீங்களும், ஏன் பி.எஸ்.ராமையாவின் கதையை உங்களுக்குச் சொல்லிக் கொணடிருக்கும் நானும்கூட குழந்தைகளின் பதில்களற்ற கேள்விகளால் திகைப்பவர்கள்தானே. தந்தை தடுமாறுகிறார்.சட்டென அவருக்குத் தோன்றிய கற்பனையை மகளுக்குச் சொல்லி, ஆளவிடுப்பா சாமி என யோசித்து சொன்ன பதில் என்ன தெரியுமா? “மகளே இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனுஷனும்,மனுஷியும் ஒரு உண்மையைப் பேசினால் மானத்தில் ஒரு நட்சத்திரம் உருவாகும்”.

இந்தப் பதிலால் குழந்தை உற்சாகமாகிவிட்டது. “அய்யா நட்சத்திரங்கள் சத்தியத்தால் உருவாகிறது. ஒரு உண்மைக்கு ஒரு நட்சத்திரம் என துள்ளிக் குதிக்கிறது. தந்தை சமாதானமாகி தப்பி கதையிலிருந்து வெளியேறுகிறார்.

கதை இப்போது குழந்தையோடு நடக்கிறது. குழந்தை சூரியன் சாயுங்காலத்திற்காக காத்திருக்கிறாள். தன்னைத் தானே முகம் திருத்துகிறாள். உண்மையைச் சந்திக்கத் தயாராகிறாள் ஆறுவயதுக் குழந்தை ரோஹிணி வாசலுக்கு வருகிறாள். வானம் அவளுக்காக காத்திருக்கிறது. இரவும் பகலும் சந்தித்து விலகும் அந்தப் புள்ளியில் நட்சத்திரங்கள் வானில் தோன்றத் துவங்கின. ரோஹிணி மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறாள். “ஆஹா ஒரு உண்மைக்கு ஒரு நட்சத்திரம்.

“இது அம்மா சொல்லிய உண்மைக்கு ,இது பாட்டி சொல்லிய உண்மைக்கு எனச் சொல்லி சொல்லிக் குதிக்கிறாள். வாசலுக்கு வந்த அம்மாவிற்கு குழந்தையின் முகம் முழுக்க நிறைந்திருக்கும் சந்தோசம் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. “என்னடா ஆச்சு.என்கிறாள் அம்மா. குழந்தை சொல்லிய பதில் அம்மாவிற்குப் புரியவில்லை. “அம்மா பாரேன் இந்த வானம் எம்புட்டு அழகா இருக்கு. உன்னோட முகத்தப் போலவே. அத்தனையும் உண்மையை ஊரார் பேசுனதால உருவான நட்சத்திரங்கள்” என்கிறது குழந்தை.

வெளியே சென்று வந்த தந்தை நடக்கும் உரையாடலை கவனிக்கிறார். “என்னடா ஆச்சு”
அப்பா பாரேன், வானம் முழுக்க எத்தனை உன்மைகள்”
“சரி, இருட்டாயிருச்சுல்ல, வெளியே நின்னது போதும், வீட்டுக்குள்ள வா.” என்கிற தாயின் சொல்லை அந்தக் குழந்தை சட்டை செய்யவில்லை. விடாமல் வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களைப் பார்த்துக் கும்மாளம் போடுகிறது. தாயும் தந்தையும் வீட்டிற்குள் போய் அவரவர் வேலையில் மூழ்கிவிட்டனர். குழந்தையின் உற்சாகம் வாசலில் கரை புரண்டு ஓடுகிறது. “அந்தா ஒன்னு, இந்தா ஒன்னு என துள்ளிக் குதிக்கிறாள். எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

சட்டென குழந்தை அப்பா …என கத்துகிறது. கத்திய மகளின் குரல் கேட்டு திகைக்கிறார் தந்தை. “என்னடா ஆச்சு,என்னப்பா ஆச்சு, என தாயும் தந்தையும் குழந்தையை சமாதானம் செய்கிறார்கள்.

அப்பா, “,இந்த உலகத்தில் யாரோ பொய் சொல்லியிருக்கிறார்கள் என்கிறது குழந்தை, வானத்தை குழந்தை கவனித்துக் கொண்டிருந்த போது ஒரு எரி நட்சத்திரம் தலைகுப்புற கீழ் நோக்கி வருவதைப் பார்த்த தால்தான் குழந்தை இந்த உலகினில் யாரோ ஒருவர் பொய் சொல்லிவிட்டார் என்று கண்ணீர் சொட்டுகிறது.
“அப்பா நீ தானே சொன்ன,உலகத்தில யாராவது ஒரு உன்மை சொன்னா ஒரு நட்சத்திரம் உருவாகும்னு. இப்ப ஒரு நட்சத்திரம் கீழே விழுதுன்னா, யாரோ பொய் சொல்லியிருக்காங்க அப்படித்தானே.

“பாவம்பா கடவுள்.
என்னாலேயே தாங்க முடியலையே
கடவுள் எப்படித் தாங்குவார்.
பாவம்பா கடாவுள் “

கடவுளின் துக்கத்திற்காக கண்ணீர் விடுகிற குழந்தையை உலகின் எந்த மொழிக் கதையிலும் தேடிக் கண்டுபிடிக்க முடியாது.

கதையை பி.எஸ்.ராமையா, இப்படி முடிக்கிறார்.

அந்த பச்சை உள்ளத்தில் எழுந்த துக்கத்தையும்,அதனால் ஏற்பட்ட துன்பத்தையும் நாவின் சொற்களால் விவரிக்க முடியாது. அது பரிசுத்தமான இருதயம் இருதயத்தினோடு தனது சொந்த பாஷையில் பேச வேண்டிய புனிதமான துக்கம்.

இந்தக் கடைசி இரண்டு வரிகள்தான் நட்சத்திரக் குழந்தைகள் எனும் பி.எஸ். ராமையாவின் கதையை தமிழ்ச் செவ்வியல் கதையாக உருமாற்றி விடுகிறது.(தொடரும்)

1)https://maduraiseithi.in/m-manimarans-oru-kathai-1/

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *