ஒரு கதை 3 … கடவுள் எனும் கருத்து

ந.பிச்சமூர்த்தி

தமிழ்ச் சிறுகதைகளில் கடவுள்கள் எனும் தலைப்பின்கீழ் இரண்டு மூன்று தொகுப்புகளாக கதைகளைத் தொகுக்கலாம். அவ்வளவு கதைகளை எழுதியிருக்கிறார்கள் நம் சிறுகதை எழுத்தாளர்கள். புதுமைப்பித்தன் தன்னுடைய கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் கதையில் சிவனை அழைத்து வநது வீதிகளில் அலையவிடுவார். கடவுளுக்கு சுத்தமாக இருப்பதுகூட எப்பிடின்னு தெரியாதுன்னு அவரை படுத்தி எடுப்பார். கேட்டதையெல்லாம் தன்னுடைய பெரும் சக்தியால் தருவிக்கும் கடவுளைப் பார்த்து அய்..அய்ய் மேஜிக் மாமா என்று குழந்தையை கேலி செய்ய வைப்பார் புதுமைப்பித்தன்.

கிருஷ்ணன் நம்பி தன்னுடைய கணக்கு வாத்தியார் எனும் சிறுகதையில் கடவுள் கிருஷ்ணணை அழைத்து வரும் இடம் பள்ளிக்கூடம். அதிலும் ஆரம்பப்பள்ளி வகுப்பறை. அங்கு கேட்கப்படும் எளிய கேள்விகளுக்குக்கூட விடை தெரியாமல் கடவுள் இருப்பதைப் பார்த்து குழந்தைகள் கைகொட்டி சிரிப்பார்கள். அப்போது கிருஷ்ணன் நம்பி சொல்வார்.” அப்பா கடவுள்களா நீங்கெல்லாம் மேலே இருந்துக்கிட்டு வரந்தரத்தான் லாயக்கு. ஒருநாளும் உங்களால இந்த மண்ணுல வாழ முடியாது, பேசாமா நீங்க மேலேயே ஓடிப்போயிருங்க” ..

அநேகமாக கடவுள் பற்றிய எல்லாக் கதைகளிலும் பெருந்தெய்வங்கள் அதிலும் குறிப்பாக ஆண் தெய்வங்களே அலைந்து திரிகின்றனர். இதனில் விதிவிலக்கான கதை ந.பிச்சமூர்த்தி எழுதியிருக்கும் பெரியநாயகி உலா…

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி தமிழ்ப் புதுக்கவிதைகளின் வித்தகர். கும்பகோணம் இலக்கிய முகாமின் முன்னனிப் படைப்பாளி. இவருடைய கதைகளும் மணிக்கொடியில் வெளிவந்துள்ளன. சுதந்திரசங்கு, சுதேசமித்திரன் எனும் இதழ்களில்தான் ந.பிச்சமூர்த்தி அதிகம் கதைகளை எழுதியிருக்கிறார். பொது இலக்கிய உலகினில் ஒரு எழுத்தாளரின் மீது அழுத்தி எழுதப்படுகிற முத்திரையை கலைப்பது ஒன்றும் அவ்வளவு எளிதில்லை. அப்படித்தான் ந.பிச்சமூர்த்தியின் மீது கவிஞர் எனும் முத்திரை அழுத்தமாக பதிவாகிவிட்டது. இதுவே அவருடைய கதைகளின் மீது பெரும் வாசக கவனம் குவியாமல் போனதற்கு காரணம். தமிழின் நவீன இலக்கிய கதைக்காரர்களின் முதல் தலைமுறை எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவர் ந.பிச்சமூர்த்தி. அதற்கு அவர் எழுதியிருக்கும் பல கதைகள் சாட்சியமாகக் கிடைக்கின்றன. அவருடைய முத்திரைக் கதைகளில் ஒன்று பெரிய நாயகி உலா. தமிழில் பெண் கடவுளர்களை முதலில் தரையில் இறக்கி உலவ விட்டவர் ந.பிச்சமூர்த்தி..

கோயில் கருவறை
கதை கோயில் கருவறைக்குள் இருந்து துவங்குகிறது. நூறு வருசத்திற்கு மேலாக கும்மிருட்டிற்குள் இருந்த பெரியநாயகிக்கு நின்னு நின்னு கால் மரத்துப்போச்சு. பேசாமா கோயில் இருந்து கிளம்பி போகனும்னு ஒரு நினைப்பு வருது கடவுளுக்கு. பெரிய நாயகி கருவறைய விட்டு வெளிய வந்ததைப் பார்த்ததும் காவல் தெய்வங்களுக்கு ஒரே அதிர்ச்சி. “ஆத்தா எங்க கிளம்பிட்டீக.” “அடியே காவக்காரிகளா ஊரைச் சுத்திப் பாப்போம் வாங்க,”பெரியநாயகியே கூப்பிட்டா என்ன செய்ய முடியும். காவல் தெய்வங்களும் உடன் போகிறார்கள். முதலில் அவர்கள் பெரிய நாயகியை அழை.த்துப் போவது ஒரு அக்ராஹரம். அங்கே பெண்கள் பழக்கம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரியநாயகியைப் பார்த்ததும் அவர்களுடைய பேச்சு மூன்று பேரின் பக்கமும் திரும்புகிறது.

சொத்துனா என்ன?
என்ன அழகு, எம்புட்டு நகை. சாட்சாத் பெரியநாயகி போலவே இருக்கேன்னு திகைக்கிறாங்க. காவக்கார சாமிகளுக்குப் பயம். இந்த சலங்கைதான் காட்டிக் கொடுக்குது போலன்னு நினைச்சு” பெரியநாயகி ஆத்தா, முதல்ல உங்க கால்சலங்கைய கழட்டுங்க. சும்மா சல சலன்னு சத்தம் போடுது”ன்னு ,காவல் தெய்வங்க ரெண்டும் சொல்லவும். பெரியநாயகி கழட்டிக் குடுத்திட்டு அடுத்த தெருவுக்கு போறாங்க.

அடுத்த தெரு சன்னதி தெரு. அங்கங்க ஆட்கள் எதையோ பறி கொடுத்த மாதிரியே இருக்காங்க. அப்பப்ப கருப்புக் கோட்ட போட்டுக்கிட்டு அஞ்சாறு பேரு போகவும் வரவுமா இருக்காங்க. வந்து இந்த பறி கொடுத்த மூஞ்சிகள்ட்ட ஏதோ பேசுறாங்க. பெரிய நாயகி என்னாங்கடி விசயம், யார் இவுங்க. என்னா நடக்குது இங்கன்னு கேட்கிறாங்க. அதுவா,இந்த தெருவில பாதிபேருக்கும் மேல வக்கீல்கள் வீடுதான். இங்க உம்முன்னும், உற்சாகமாயும் அழையிறதெல்லாம் வக்கீல்கள்களோட கட்சிக்காராக. “எனக்கு எதுவும் புரியல. புரியறமாதிரி சொல்லு”. “இங்க. சொத்துத் தகராறுதான் அடிப்படை. அண்ணன் தம்பிகளுக்குள்ள சொத்துக்காக சண்டை. மாமான் மச்சினங்களுக்குள்ள சொத்துக்காக சண்டை. அடுத்தடுத்த வீட்டுக்காரனுகளுக்குள்ள சண்டை. இப்பிடி யாருக்கு யாரோட சொத்து தகராறுன்னாலும் தீர்த்து வைக்கிறவுகதான் வக்கீலுக. அதை தீர்த்து வைக்கிற இடம் கோர்ட்” சரிடி அது நம்ம கோயிலவிட சக்தியான இடமா இருக்கும் போலயே, பெறகு எதுக்கு நம்மள சுத்தி சுத்தி வாராக..சரி..

”’சொத்து சொத்துன்னு சொல்றீங்களே அத நான் ஒன்னும் படைக்கலையே..”” எங்கருந்து வந்துச்சு இந்த சொத்து. நான் படைச்சதெல்லாம் உலகத்தை, உலகத்தில மனுங்கள. கொஞ்சம் ஆறறிவு. அவ்வளவுதானே.. பிறகு எப்பிடி வந்துச்சு இந்த சொத்து..
“அதுவா, மனுசங்கல்ல ஒரு சிலரு நல்லா வாழ்றதுக்காக அவனுகளே உருவாக்கினதுதான் இந்த சொத்து..

பணமா?
அப்படியே கதை சந்தைக்கு நகருது. பலசரக்குக்கடை,எண்ணெய்க்கடை, ஓட்டல்..” “என்ன இங்க ஒரே சத்தமா, கிடக்கு.” .”அதுவா,சந்தை. இங்க என்னா வேணும்னாலும் வாங்கலாம். தேவை பணம். பணமிருந்தா என்ன வேணும்னாலும் வாங்கலாம். உரையாடல் நடக்கும்போதே ஒவ்வொரும் கடைமுதலாளி கிட்ட எதையோ கொடுப்பதையும், அத வாங்கி அவரு கல்லாப் பெட்டியில போடுறதையும் பார்த்த பெரியநாயகி”என்னது, அதுன்னதும், அதுவா பணம், இந்த லோகத்தில எல்லாமே பணத்தாலதான் நடக்கும். இதைக் கேட்டதும் திகைச்ச கடவுள் பெரியநாயகி அது சரி நீங்க பணம்,,பணம்ங்கிறீங்களே இதையும் நான் படைக்கலையே. இது எப்பிடி வந்தது. அப்ப கதைக்குள்ள வரி தமிழ் வாசகர்களுக்கு மிகவும் முக்கியமானது. அப்ப காவல் தெய்வங்கள் சொல்றதா, ந.பிச்சமூர்த்தி சொல்றாரு..” நான் படைச்சதெல்லாம் உலகத்தையும் ஆறறிவையுந்தான். ஆனா இந்த மனுசப் பயகளுக வலுத்தவன் வசதியா வாழுறதுக்காக பணத்தையும், சொத்தையும் உருவாக்கிட்டாய்ங்க. ,அத காப்பாத்திக்கிறதுக்கு மதம், சாதி மத்ததெல்லாம் உருவாக்கி வச்சிக்கிட்டாங்க. எதுவும் எனக்கு நல்லதா தெரியல..நாம கிளம்லாம்..

நடுவில எதுக்கு வியாபாரி?.
இருங்க, என்ன அவசரம். இல்ல. இந்த சந்தையில கிடைக்கிறதெல்லாம் இயற்கையில கிடைக்கிற பொருள்தான. பிறகு எதுக்கு பணத்தக் கொடுத்து வியாபாரிட்ட வாங்கனும். வியாபாரி அவரோட பணத்தக் கொடுத்து பொருள வாங்கியிருக்காரு, பிறகு விட்ட பணத்த எடுக்கனும்ல…எதுக்கு இவரு வாங்கிறதும், விக்கிறதும்,நேரடியா அவுங்கவுங்க தேவைக்கு அவுங்கவுங்களே இயற்கையில கிடைக்கிற பொருள நேரடியா பயண்படுத்த வேண்டியதுதான, நடுவில எதுக்கு வியாபாரி?.

அதுசரி. இப்ப உன்னைய பார்த்து குறைய சொல்ல வாற மக்க என்ன நேரா வந்துடுறாங்களா? இல்லையில்ல, நடுவில குருக்கள்னு இடைத்தரகர நீயுந்தான வச்சிருக்க. எப்பா அது நாஞ் செஞ்ச ஏற்பாடு இல்ல தெரிஞ்சுக்கோன்னு பெரியநாயகி சொல்லியிருந்தா கதை எவ்வளவு நல்லாயிருக்கும்.. ஆனா கதையில பெரிய நாயகி முறைச்சு பார்க்கிறதா மட்டும்ந்தான் இருக்கு. கதைய வாசிக்கிறவுங்களே எழுதிக்கிட எழுத்தாளன் விட்டுட்டுப் போற வாசக இடைவெளின்னு புரிஞ்சுக்கிட்டா பெரிய நாயகி ஒரு போஸ்ட் மார்டன் ஸ்டோரியா தன்னை மாத்திக்கிட்ட மாதிரியும் தெரியும்.

கடவுளின் சொல்
எழுத்தாளர் கதைய அங்கய முடிக்கல. பெரியநாயகி அடுத்த தெருவுக்கு போறாங்க. அது வறுமை பிடுங்கி திங்கிற உழைப்பாளி மக்கள் குடியிருக்கிற தெரு. இங்கயும் சாமி வறுமையும், ஏழ்மையும் நான் படைக்கல. இது மனுசப் பயலுக செஞ்ச சூதுன்னு பேசல. ஆனாலும் கதையின் எழுதப்படாத வரிகள் வாசகனோட மனசில திறந்து அலை அலையா வருவத தவிர்க்கவே முடியாது. பெரியநாயகி உலா எனும் கதை ஏற்றத்தாழ்வு, சொத்து, பணம் இவையெல்லாம் மனிதர்களின் துர்க்குணங்களின் விளைவுகள் என்பதனை கடவுளின் சொல்லாக சொல்ல வைக்கிறார் ந.பிச்சமூர்த்தி.

கர்ப்பகிரக இருளில் இருந்து கிளம்பிய பெரியநாயகியை ஒரு சினிமா சூட்டிங்கில் சாமியாக நடிக்க வைப்பதில் கொண்டு போய் நிறுத்துகிறார் எழுத்தாளர். அங்கு அவரின் மீது விழும் அதீத வெளிச்சத்தை மட்டுமல்ல, சூட்டிங்கிற்காக கிடைத்த பணத்தையும் அவர் விரும்பவில்லை..இந்த உலகம் மனிதர்களின் விருப்பத்திற்கேற்றபடி சுழல்வதில்லை. தந்திரக்காரர்களின் கைப் பொருளாகிவிட்டது என நூற்றாண்டுகளாக. உறைந்து நின்ற கர்ப்பகிரக இருட்டுக்குள்ளேயே சென்றுவிட்டார் பெரியநாயகி.

மாபெரும் தத்துவ தர்க்கங்களை எளிய புரிதலுக்கு உள்ளாக்கிடும் வித்தை நிறைந்தவை நம் தமிழ்க்கதைகள். குடும்பம், தனிச்சொத்து, கூலியுழைப்பு, மூலதனம் போன்ற தத்துவ விசாரங்களைப் புரிந்து கொள்வதற்கான சாவி பெரியநாயகி உலா எனும் தமிழ்ச் சிறுகதை.
ம.மணிமாறன் ( தொடரும்)

1)https://maduraiseithi.in/m-manimarans-oru-kathai-1/

2)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-2/

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *