
அ.மாதவையா குடும்பம்.
தமிழ்ச்சிறுகதைகளுக்கு நூறு வயதிற்கும் மேலாகிறது. பழுத்துச் செழித்திருக்கும் இந்த பிரம்மாண்டமான விருட்சத்தில் வந்தமர்ந்த ஆதிப்பட்சிகள் மூன்று. பாரதி,அ.மாதவையா,வ.வே.சு எனும் அந்த பெரும் கலைஞர்கள்தான் சிறுகதை எனும் வடிவத்தை தமிழ் இலக்கியம் கண்டடைவதற்கு முன்பாகவே பல கதைகளையும் எழுதிச்சேர்த்தனர்.
போர்க்குரல்
இவர்களில் மிகவும் தனித்தவர் அ.மாதவையா. அவருடைய குசிகர் குட்டிக்கதைகள் எனும் தொகுப்பு தமிழில் முதல் சிறுகதை என்று சொல்லப்படுகிற குளத்தங்கரை அரசமரத்திற்கும் முந்தியது. அ.மாதவையாவின் கதைகள்.ஒவ்வொன்றம் அவருடைய காலத்தின் சனாதனிகளுக்கு எதிரான போர்க்குரல். வ.வே.சு. அய்யர் நடத்தி வந்த கல்விக்கூடத்தில் பிராமணர்களுக்கு தனிப்பந்தியும், மற்றவர்களுக்கு தனிச்சாப்பாட்டு முறையையும் பின்பற்றியது பெரும் விவாதப்பொருளாகியது. அதனைக் கண்டித்து ஏணியேற்ற நிலையம் என்ற கதையை எழுதியவர் அ.மாதவையா.

ம.மணிமாறனின் ஒரு கதை
பிராமணியத்திற்கு எதிரான அவருடைய உரத்த குரல்களின் தொகுப்பே அவருடைய கதைகள். அதிலும் அவருடைய திரௌபதி கனவு மிகவும் முக்கியமான கதை. இக்கதையை வாசிக்கிற போது மிக கவனமாக இது 1920-ம் ஆண்டுகளில் எழுதப்பட்ட கதை எனும் புரிதலோடுதான் வாசிக்க வேண்டும். அதிலும் அ.மாதவையாவுடைய திரௌபதி கனவு எனும் கதை மிகவும் முக்கியமான கதை. இன்றைக்கும் விவாதத்திற்குள்ளாகும் பெண்ணியம் குறித்துப் பேசிய கதை. இரண்டாயிரத்திற்குப் பிறகு எழுதப்படுகிற சிறுகதைகள்கூட எழுதத் தடுமாறும் மிக முக்கியமான தர்க்கத்தை கதையில் கையாண்ண்டிருப்பார் அ.மாதவையா. கதையின் முதல் வரியே, நான் ஒரு பிராமணக் கைம்பெண் என்று துவங்குகிறது. அவளே தான் கதை முழுவதும் பேசுகிறார்.

திரௌபதி கனவு
திரௌபதி கனவு
என்னுடைய ஞாபகத்தில் வரும் முதல் காட்சி என்ன தெரியுமா? நான் மாலைசூடி மணப்பெண்ணாக பல்லக்கு ஏறிப்போனதும், என்னுடன் பல்லக்கில் வந்தவன் பாடை ஏறிப்போனதும்தான். அப்படி என்றால் நான் பிறக்கும் போதே கைம்பெண் இல்லை என்பது உண்மை தானே? பாடை தெருவைக் கடந்த அடுத்த சிலநாளிலேயே என்னை மொட்டையடித்து வீட்டிற்குள் முடக்கி விட்டார்கள். எலி வளையைச் சுற்றுவதைப் போல வீடு மட்டுமே என்னுடைய மொத்த உலகம் ஆகிவிட்டது. என்னைப் பார்த்து பார்த்து நொந்து போனாளோ என்னமோ அம்மாவும் போய்ச் சேர்ந்து விட்டாள். நாற்பது வயதைக் கடந்த அப்பாவுக்கு பெண்டாளாமல் இருக்க முடியவில்லை. என்னை விட இரண்டு வயது சின்னப் பெண்ணை எனக்கு சித்தியாக்கி வீட்டிற்கு கூட்டி வந்துவிட்டார். வந்தவள் அவள் மட்டும் வரவில்லை. கூடவே அவளுடைய அம்மாவையும் கூட்டிட்டு வந்தாள். பிறகு என்ன எங்க அப்பாவோட மாமியார்காரி வச்சதுதான் சட்டம். நித்தமும் அடி, வசவுதான். வீடு சித்திரவதைக்கூடமாகிப் போச்சு. இப்பக்கூட சோத்துப்பானைய மெதுவா வைக்கலங்கிறதுக்காக என்னோட மொட்டை மண்டையில ஊதாங்குழலாள அடிச்சுப் போட்டா..வலி தாங்கல…நான் தூங்கும் போதுதான் நிம்மதியா இருக்கேன். ஏன் தெரியுமா? தூக்கத்திலதான் எனக்கு வித விதமான கனவுகள் வரும்.

அ.மாதவையா
ஆண்கள் கழுத்தில் மணி
வாசிக்கத் துவங்கும்போது மிக சாதாரண கதைபோல தோன்றும் கதை திரௌபதி கனவினில் தான் அசாத்தியமான கதையாகிறது. கனவின் கதைகளை எழுதினால் என்னவெல்லாம் பிறக்கும். நிறைவேறாத பெரும் வேட்கையையே பலரும் கனவாக காண்கிறார்கள். திரௌபதி கனவில் அவள் தங்க வைர நகைகள் பூட்டி வீதியில் இறங்கி நகர் வலம் வருகிறாள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பெண்கள் ஒய்யாரமாகப் போடப்பட்ட நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அருகில் கைகட்டி புருஷர்கள் நிற்கிறார்கள். வீட்டிற்குள்ளும் புருஷ நடமாட்டம் இருக்கிறது. ஆனால், அவர்களைப் பார்க்க சகிக்கவில்லை..அகோரமாக இருக்கிறார்கள். பெண்கள் கட்டளையிட்டதும் மறுநொடியில் ஆண்கள் அந்த வேலையைச் செய்து முடிக்கிறார்கள். சட்டென அவளின் கனவு தெருவில் இறங்கியது. தெருவில் இரண்டு ஆண்கள் நடமாடுகிறார்கள். அவர்களுடைய கழுத்தில் மணி ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. அந்த மணி அவர்கள் நடக்க நடக்க ஓங்கி ஒலிக்கிறது. அவர்கள் திரௌபதியைப் பார்த்தவுடன் தலைகவிழ்கிறார்கள்.

குசிகர் குட்டிக்கதைகள்
இவளுக்கு அதிசயமாக இருக்கிறது. யாரிடம் கேட்கலாம் என்று தெருவில் நடக்கிறாள். ஒரு வீட்டு வாசலில் ஒரு பெண் நாற்காலியில் அமர்ந்திருக்க அருகில் ஒருவர் நின்று விசிறியால் அந்த பெண்ணுக்கு வீசிக்கொண்டிருக்கிறான். திரௌபதிக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. அருகில் போய் அந்தப் பெண்ணுக்கு வணக்கம் சொன்னாள். உடனே அவள் சேவகா,சேவகா என அழைக்கிறாள். உள்ளேயிருந்து குரல் வரவில்லை. உடனே அருகில் விசிறி வீசிக் கொண்டிருந்த ஆடவனைப் பார்த்து உடனே உள்ளே போய் இவருக்கு நாற்காலி எடுத்துவந்து போடுங்கள் என்கிறாள். அடுத்த நொடியில் அவளுக்கு நாற்காலி போடப்படுகிறது. சரி விருந்தினருக்கு குடிக்க ஏதாவது கொண்டு வாருங்கள் என்றவுடன் அவர் உள்ளே போகிறார். அதுவரை பொறுத்திருந்த திரௌபதி, இது யார் என்கிறாள். என்ன கேள்வியிது. அவர் என் கணவர் என்கிறாள் அந்தப்பெண். ஆச்சர்யமாக இருக்கிறதே, நீங்கள் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டு அவருக்கு வேலை சொவ்கிறீர்கள். அவர் அப்படியே செய்கிறார். வீட்டு வேலை முழுக்க ஆண்தான் செய்வார்கள் போலயே இங்கு என்கிறாள் திரௌபதி. அதைக் கேட்டவுடன் கல கலவென வெடித்துச் சிரிக்கிறாள்
ஆண் கொள்ளல்
அந்தப்பெண். “நீங்கள் ஆண்கள் நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று நன்றாகவே தெரிகிறது. இது பெண் நாடு. இங்கு பெண்கள்தான் எல்லாமும். ஆண்கள் நமக்கு சேவகம் செய்ய வேண்டும். தயங்கி தயங்கி கேட்கத் துவங்கினாள் . “இங்கே கணவர் இறந்துவிட்டால் மனைவியர் மறுமணம் செய்ய அனுமதி உண்டா?.” நிச்சயமாக.இனி கதைக்குள் நடக்கும் உரையாடலை அ.மாதவையாவின் மொழியில் படிப்பது நமக்கு இன்னும் கூடுதல் புரிதலை உருவாக்கும். இனி கதைக்குள் நூறு வருடங்களுக்கு முன்பாக அ.மாதவையா எழுதிய உரையாடல் …
“இங்கே விதவைகள் புனர் விவாகம் செய்து கொள்ளலாமோ? தங்களை விட வயது குறைந்த புருஷர்களை. அதில் என்ன சந்தேகம்? என் அக்காள் முதலில் தன்னை விட வயது குறைந்த வாலிப புருஷனை ஆண் கொண்டாள். இந்த நாட்டில் பெண்கள் வாழ்க்கைப்படுவது என்று சொல்வதில்லை. ஆண் கொள்ளல் என்றுதான் அழைப்போம். முதலில் கொண்ட ஆணுக்கு பெண் குழந்தை பிறக்கவில்லை. மற்றொரு வாலிபனை ஆண் கொள்ளல் செய்தாள். அவனுடன் அக்காளுக்கு பெண் குழந்தை பிறந்தது. எங்களுடைய பெண் நாட்டில் பெண் குழந்தைகளுக்கு மட்டும்தான் சொத்தில் பங்குண்டு. அதனால் எத்தனை ஆண் குழந்தைகள் பிறந்தாலும் மகிழ்ச்சி அடையமாட்டோம். பெண் குழந்தை பெற்றுத் தராத ஆணை தள்ளி வைத்துவிட்டு மற்றொரு ஆண் கொள்ளல் செய்து கொள்வோம். ஒதுக்கி வைக்கப்பட்ட ஆண்களைத்தான் நீங்கள் வரும்போது பார்த்திருக்கிறீர்கள். அவர்களுக்கு எங்கள் பெண் நாட்டின் சாஸ்திரப்படி மறுமணம் செய்ய அனுமதியில்லை. அழுக்கடைந்து இருக்க வேண்டும். வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே அவர்களுக்கு குளிப்பதற்கு அனுமதி உண்டு.
இலக்கிய சாட்சி
திரௌபதி கனவில் வரும் காட்சிகளின் வழியாக 1920-ம் ஆண்டுகளில் இருந்த ஆண் ஆதிக்க சமூகத்தின் வன்மங்களை தலை கீழாக கவிழ்த்திப் பார்த்திருக்கிறார் அ.மாதவையா. எந்த சாஸ்திரங்களை நியாயம் போல முன் வைத்தார்களோ அதனை ஏன் இதனை ஆண்களுக்கு நிர்பந்திக்கவில்லை. என் கதையினில் வருகிற திரௌபதி காணும் கனவில் மட்டுமாவது மனைவியை இழந்த கணவர்கள் அடுத்த திருமணம் செய்யாமல் இருக்கட்டும். அதற்கு உங்கள் ஆண்கள் நாடு மறுத்தால், நாங்கள் பெண்கள் நாட்டை உருவாக்குகிறோம். இங்கே விதிக்கப்படுகிற சட்டங்களும் நடைமுறைகளும் பெண்களுக்கு உகந்ததாக இருக்கட்டும் என திரௌபதி கனவின் வழியாக தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியவர் அ.மாதவையா.
அ.மாதவையாவின் எல்லாக்கதைகளும் பிராமணிய மேலாதிக்கத்திற்கு எதிரான கூர்மையான விமர்சனமாகவே முன் வைக்கப்பட்டிருப்பதை அவருடைய கதைகளை வாசிப்பதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். சொந்த சாதிக்கு துரோகம் செய்பவர்களே சாதி மறுப்பையும் அதன் வழியே சாதி ஒழிப்பையும் முன்னெடுக்க முடியும் என்பதற்கான இலக்கிய சாட்சி அ.மாதவையா.
–ம.மணிமாறன் (தொடரும்)
1)https://maduraiseithi.in/m-manimarans-oru-kathai-1/



