
மனோந்திரா எழுதும் எளிதாக இலக்கணம் கற்கலாம் தொடர்.
சென்ற வாரம் எழுத்து, அசை மற்றும் சீர் ஆகியவை குறித்துப் பார்த்தோம். அடுத்த செய்யுள் உறுப்பாகிய ‘தளை’ என்பதைப்பற்றி இன்று விரிவாகக் காண்போம். ஒரு சீருடன் மற்றொரு சீரைக் கட்டுவதையே அல்லது பிணைப்பதையே நாம் ‘தளை’ என அழைக்கிறோம். அதாவது இரண்டு சீர்களை ஒன்றுடன் ஒன்று தளைப்பதால் அதைத் ‘தளை’ எனச் சொல்கிறோம்.
நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஓர் ஒழுங்கில் நிற்றல் என அதைச் சொல்லலாம். அவை ஒன்றியும் வரும் ஒன்றாமலும் வரும். அதாவது நின்றசீரின் இறுதி அசையும் வருஞ்சீரின் முதல் அசையும் ஒரே வகையான அசையாக இருந்தால்(நேர்-நேர் அல்லது நிரை-நிரை) தளை ஒன்றி வந்திருப்பதாகச் சொல்லப்படும். அன்றி, நேர்- நிரை என்றோ அல்லது நிரை- நேர் என்றோ வருமாயின் தளை ஒன்றாமல் வந்திருப்பதாகச் சொல்லப்படும்.
தளைகள் ஏழு வகைப்படும். அவையாவன:
நேரொன்றாசிரியத் தளை
நிரையொன்றாசிரியத் தளை
இயற்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை
கலித்தளை
ஒன்றிய வஞ்சித்தளை
ஒன்றாத வஞ்சித்தளை
நேரொன்றாசிரியத் தளை
மாச்சீர் நிற்குமிடத்து(தேமா மற்றும் புளிமாச்சீர்களின் ஈற்றசை எப்பொழுதும் நேரசைகளாகவே இருக்கும்) அதனை அடுத்து வரும் சீரின் முதல் அசை நேரசையாக இருக்குமெனில் அது ஒன்றி வந்த தளையாகும். (உ-ம்)
என்முன் வந்தான்
நின்ற சீரின் ஈற்றசை ‘முன்’ என்பதும் நேரசை; வந்த சீரின் முதலசையான ‘வந்’ என்பதும் நேரசை. இரண்டும் ஒன்றி வந்துள்ளன. எனவே இது நேரொன்றாசிரியத் தளையாகும்.
நிரையொன்றாசிரியத் தளை
விளச்சீர் நிற்குமிடத்து(கூவிளம் மற்றும் கருவிளச் சீர்களின் ஈற்றசைகள் எப்பொழுதும் நிரையசைகளாகவே இருக்கும்) அதனையடுத்து வரும் சீரின் முதல் அசை நிரையசையாக இருக்குமெனில் அதுவும் ஒன்றிவந்த தளையாகும்.(உ-ம்)
குயில்களின் வசிப்பிடம்
நின்றசீரின் ஈற்றசையும்(களின்) வந்தசீரின் முதல் அசையும்(வசிப்) நிரையசைகளாகும். எனவே இது நிரையொன்றாசிரியத் தளையாகும்.
இயற்சீர் வெண்டளை
இ
இயற்சீர்கள் என்பவை ஈரசைகள் கொண்ட சீர்களாகும். அவை மொத்தம் நான்கு இருக்கின்றன. அவையாவன:
தேமா
புளிமா
கூவிளம்
கருவிளம்
மா முன் நிரையும் விளம் முன் நேரும் வருவதை இயற்சீர் வெண்டளை என்கிறோம். அதாவது நின்றசீர் தேமாச் சீராகவோ அல்லது புளிமாச் சீராகவோ இருந்தால்(இவை இரண்டும் நேரசையில் முடிபவை) அதனை அடுத்து வரும் சீரின் முதலசை நிரையசையாக இருக்க வேண்டும். (உ-ம்)
கற்க கசடறக்
க என்ற நேரசையில் முதற்சீர் முடிந்திருக்கிறது. எனவே கச என்ற நிரையசையில் அடுத்தசீர் தொடங்குகிறது.
நின்றசீர் கூவிளச் சீராகவோ அல்லது கருவிளச் சீராகவோ இருந்தால்(இவை இரண்டும் நிரையசையில் முடிபவை) அதனை அடுத்துவரும் சீரின் முதலசை நேரசையாக இருக்க வேண்டும்.(உ-ம்)
கற்பவை கற்றபின்
பவை என்ற நிரையசையில் முதற்சீர் முடிந்திருக்கிறது. எனவே கற் என்ற நேரசையில் அடுத்த சீர் தொடங்குகிறது.
வெண்சீர் வெண்டளை
காய்ச்சீர்கள் மொத்தம் நான்கு; அவை நான்கும் வெண்பாவிற்குரியன. இயற்சீர்கள் நான்கொடும் ஒரு நேரசையைச் சேர்க்க காய்ச்சீர்கள் தோன்றும்.
முல்லை- தேமா
முல்லைப்பூ – தேமாங்காய்
அரளி- புளிமா
அரளிப்பூ- புளிமாங்காய்
தாமரை- கூவிளம்
தாமரைப்பூ- கூவிளங்காய்
மணிச்சிகை- கருவிளம்
மணிச்சிகைப்பூ- கருவிளங்காய்
இந்தக் காய்ச்சீர் நிற்க வரும்சீரின் முதலசை நேரசையாக இருக்குமெனில் அது வெண்சீர் வெண்டளை எனப்படும். சுருக்கமாகக் காய்முன் நேர் வருதல் என்பர்.(உ-ம்)
யாகாவா ராயினும்….
இதில் யாகாவா என்பது தேமாங்காய்ச் சீர். எனவே அதனையடுத்த சீரின் முதலசை ரா என்ற நேரசையாக வந்துள்ளது.
இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் வெண்பாவிற்குரியனவாகும்.
கலித்தளை
காய்முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை என்று பார்த்தோம். அதற்கு நேர்மாறாக, காய்முன் நிரை வருவது கலித்தளையாகும்.(உ-ம்)
விலங்குலகின் மணிமுடியே
வியன்படையின் தனியரசே
நலமளிக்கும் புதுமைகளை
நனிபடைத்த மனிதாநீ
பலவுலகும் அடிப்படுத்தும்
பகரரிய திறனுடையாய்
பொலமிகுநின் சிறப்பதனைப்
புகன்றிடுதல் இயலாதே
அ.கி. பரந்தாமனார்
மேற்கண்ட பாடலில் அனைத்துச் சீர்களிலும் காய்முன் நிரை வந்திருத்தலை அறியலாம். (சிவப்பு எழுத்துகள்)
ஒன்றிய வஞ்சித்தளை
கனிச்சீர்கள் நான்கும் வஞ்சி உரிச்சீர்கள் ஆகும்.
அவையாவன:
இயற்சீர் எனப்படும் ஈரசைச் சீருடன் ஒரு நிரை அசையைச் சேர்க்க கனிச்சீர் தோன்றும். உரிச்சீர் என்றால் ஒரு குறிப்பிட்ட பாவிற்கு உரிமையான சீர் என்று பொருள். வஞ்சி உரிச்சீர்களான கனிச்சீர்களின் முன்பு நிரை வருவதே ஒன்றிய வஞ்சித்தளையாகும். ஒரு கனிச்சீரைத் தொடர்ந்து வரும் சீரின் முதலசை நிரையசையாக வரவேண்டும்.(உ-ம்)
1)தேமாங்கனி 2)புளிமாங்கனி 3)கூவிளங்கனி 4)கருவிளங்கனி
கமகமவென நறுமலர்மணம் வீசுதே! (மருதகாசி)
கம+கம+வென – நிரை+நிரை+நிரை= கருவிளங்கனி. இந்தக் கனிச்சீரை அடுத்து வந்துள்ள சீரின் முதலசை நறு என நிரையசையாக வந்துள்ளது. இதைத்தான் ஒன்றிய வஞ்சித்தளை என்கிறோம். மற்றுமொரு உதாரணம்
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே!
குகைவாழொரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!
– பாரதிதாசன்
ஒன்றாத வஞ்சித்தளை
மேற்கண்ட ஒன்றிய வஞ்சித்தளைக்கு நேர்மாறானது ஒன்றாத வஞ்சித்தளை. கனிமுன் நேர் வருதல் ஒன்றாத வஞ்சித்தளை எனப்படும். அதாவது கனிச்சீரை அடுத்துவரும் சீரின் முதலசை நேரசையாக இருப்பது.(உ-ம்)
பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ? (வாலி)
இதில் பச்+சைக்+கிளி- நேர்+நேர்+நிரை= தேமாங்கனியாகும். அதனையடுத்து வந்த முத்துச்சரம் என்ற சீரின் முதலசை முத் என்ற நேரசையில் தொடங்குகிறது. முத்துச்சரம் என்பதும் கனிச்சீர்தான் (முத்+துச்+சரம்- நேர்+நேர்+நிரை= தேமாங்கனி). எனவே அதற்கு அடுத்த சீர் முல்லைக்கொடி என முல் என்ற நேரசையில் தொடங்குகிறது. இவ்வாறு இப்பாட்டில் கனிமுன் கனியே வராமல் நேர் அசை வந்து, ஒன்றாமல் வந்துள்ளபடியால் இதனை ஒன்றாத வஞ்சித்தளை என்கிறோம்.
தளைகள் இத்துடன் நிறைவெய்தின. அடுத்து ஐந்தாவது செய்யுள் உறுப்பாகிய “அடி” என்பதைப்பற்றிப் பார்ப்போம்.
அடி
ஒன்றுக்கும் மேற்பட்ட சீர்களைப் பெற்று அமைவது அடி. அடி என்பது வேறு, வரி(line) என்பது வேறு. ஓரடி சீர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு வரியாகவே நிற்றலும் உண்டு, பல வரிகளாக மடக்கி எழுதப்படுவதும் உண்டு. மொத்தம் ஐந்து வகையான அடிகள் பயன்பாட்டில் உள்ளன. அவை:
1)குறளடி 2) சிந்தடி 3) அளவடி 4) நெடிலடி 5) கழிநெடிலடி.
1)குறளடி
குறள் என்ற சொல்லுக்கு ‘’குறுகிய” என்பதே பொருள். அதற்கிணங்க குறளடியானது இரண்டு சீர்களை மட்டுமே பெற்றுவரும். வஞ்சித்துறை இரண்டு சீர்களை மட்டுமே பெற்றுவரும் பாவினமாகும். இது இருசீரடிகள் நான்கு பெற்றுத் தனித்து அமையும். நான்கு அடிகளும் ஓரெதுகை பெற்றுவரும்.(உ-ம்)
ஒற்றி ஊரணை
பற்றி நெஞ்சமே!
நிற்றி நீஅருள்
பெற்றி சேரவே!
( திருவருட்பா-1350)
ஒவ்வொரு அடியும் தேமா+விளம் என்ற வாய்பாட்டில் அமையும்.
2)சிந்தடி
மிகவும் குறுகளும் இன்றி, போதிய அளவு வளர்ச்சியின்றி இருப்பதைக் குறிக்கும் சொல் “சிந்து” என்பதாகும். அளவுக்கும் சற்றுக் குறைவாக, அதாவது மூன்று சீர்களைமட்டும் பெற்றுவருவதால் இது சிந்தடி எனப்பட்டது. வஞ்சிவிருத்தம் என்ற பாவினம் சிந்தடிகளைக் கொண்டிருக்கும். இது மூன்று சீர்களைப் பெற்று நான்கு அடிகளாக வரும். நான்கடிகளிலும் ஓரெதுகை பெற்றுவரும்.(உ-ம்)
ஈடும் எடுப்புமில் ஈசன்
மாடு விடாதென் மனனே!
பாடுமென் நாஅவன் பாடல்
ஆடுமென் அங்கம் அணங்கே!
(திருவாய்மொழி 1.6.3)
அளவடி, நெடிலடி மற்றும் கழிநெடிலடி ஆகியவற்றைக் குறித்து அடுத்த வாரத்தில் பார்ப்போம். (தொடரும்)
1)https://maduraiseithi.in/manondiras-grammar-series-begins/



