கவிஞர் மனோந்திராவின் ‘எளிதாக இலக்கணம் கற்கலாம்’… தொடர் ஆரம்பம்!

கட்டுரையாளரின் இயற்பெயர் அ.கஜேந்திரன் என்பதாகும். இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள மானூத்து கிராமமாகும். இவர் ஒரு முதுகலை பட்டதாரி. மதுரை மாவட்டத்தில் தாசில்தாராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது இவர் மதுரையில் வசித்து வருகிறார். இவர் இதுவரை ‘வனத்திற்குள் எத்தனையோ வண்ணமலர்’ என்ற கவிதைத் தொகுப்பையும், ‘புரோட்டாவும், ஆம்லெட்டும்’ என்ற சிறுகதை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். அவர் எழுதும் முதல் தொடர் இது.

அலுப்பின்றி யாப்பு-1
உலகின் தொன்மையான மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. இலக்கிய இலக்கண வளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் உயர்தனிச் செம்மொழியாகத் தமிழ்மொழி திகழ்கிறது. தொல்காப்பியத்தின் ஒருபகுதியாக செய்யுள் இலக்கணம் விளங்குகிறது. யாப்பிலக்கணத்திற்கென்றே பல நூற்கள் இருக்கின்றன். அவற்றுள் மிகவும் பிரபலமானவை யாப்பருங்கலமும் யாப்பருங்கலக் காரிகையும் ஆகும். அவற்றை நேரடியாகப் படித்துப் பொருள் புரிந்துகொள்ளுதல் கடினம்.

எனவே ஆரவாரம், படாடோபம் எதுவுமின்றி எளியமுறையில் யாப்பறிந்து மரபு கவிதை இயற்றுவது எப்படி என்பதைத் தெளிவுபடுத்தும் உன்னத நோக்கத்தோடு இந்தத் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. அடிப்படையில் ஆறு உறுப்புகளைப் பற்றி நாம் தெளிவாகத் தெரிந்துகொண்டால் போதும். நாம் மரபு கவிதைகள் எழுதத் தொடங்கிவிடலாம். அவையாவன: எழுத்து, அசை, சீர், தளை, அடி மற்றும் தொடை.

எழுத்து
முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது எழுத்து என்பதாகும். எழுத்து என்றால் என்ன?
எழுத்து என்பது ஒலியின் வரிவடிவமாகும். நாம் காதில் கேட்கும் அனைத்து ஒலிகளுக்கும் நாம் வரிவடிவம் காணவில்லை. சிலவற்றிற்கு மட்டுமே வரிவடிவம் கண்டுள்ளோம். தமிழில் மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன. அவை பின்வருமாறு:

உயிரெழுத்து 12
மெய்யெழுத்து 18
உயிர்மெய்யெழுத்து 216
ஆய்தவெழுத்து 1
மொத்தம் 247

உயிரும் மெய்யும் இணைந்து உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன. உயிரெழுத்துகளில் அ இ உ எ மற்றும் ஒ ஆகிய ஐந்தும் குறிலெழுத்துகள். ஏனைய ஏழு எழுத்துகளும் நெடிலெழுத்துகள். அதேபோல் உயிர்மெய்க் குறில் 90-ம் உயிர்மெய் நெடில் 126-ம் இருக்கின்றன. மெய்யெழுத்துகள் 18-ம் ஆய்தவெழுத்து 1-ம் சேர்ந்த 19 எழுத்துகளும் ஒற்றெழுத்துகள் எனப்படும். எழுத்துகள் பற்றி இனித் தேவைப்படும் இடங்களில் விரிவாகப் பார்ப்போம்.

அசை

எழுத்துகள் ஒன்றோடு ஒன்று இணைந்து அசைந்து செல்வதால் ஒலி உருவாகிறது. எழுத்துகள் அவ்வாறு அசைந்து ஒலியெப்புவதையே நாம் அசை என்கிறோம். அசைகள் பொதுவாக இரண்டு வகைப்படும். அவை நேரசை என்றும் நிரையசை என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர நான்கு பாக்களில் ஒன்றான வெண்பாவில் மட்டும் பயன்படுத்தப்படும் இரண்டு அசைகளும் இருக்கின்றன. அவை நேர்பு மற்றும் நிரைபு என்று அழைக்கப்படுகின்றன.

நேரசையாவது: நெடிலெழுத்துகள் தனித்துவரினும் ஒற்றுடன் இணைந்து வரினும் அது நேரசை எனப்படும். ஒரு குறிலும் ஒரு ஒற்றும் இணைந்து வரினும் ஒரு சீரின் இருதியில் ஒரு குறில் மட்டும் எஞ்சி நிற்பினும் அவையும் நேரசைகளாகும். (உ-ம்)

க- குறில்
கல்- குற்றொற்று
கா- நெடில்
கால்- நெற்றொற்று

நிரையசையாவது: இரண்டு குறில்கள் இணைந்திருந்தாலும் அவற்றுடன் ஒற்று சேர்ந்தாலும் ஒரு குறிலுடன் ஒரு நெடில் இணைத்துவந்தாலும் அவற்றுடன் ஒரு ஒற்று சேர்ந்தாலும் அவையனைத்தும் நிரையசைகள் எனப்படும். (உ-ம் )

கட- குறிலிணை
கடல்- குறிலிணையொற்று
கடா- குறிநெடில்
கடாம்- குறிநெடிலொற்று

அசை பிரிப்பது எப்படி

யாப்பிலக்கணத்தில் மெய்யெழுத்துகளுக்கு மதிப்பு இல்லை. (உ-ம்)

‘சொ’ என்ற ஒற்றையெழுத்து ஓரசையாகும். அதாவது நேரசையாகும். அதேபோல் ‘சொல்’ என்ற மெய்யுடன் கூடி இரண்டு எழுத்துகளாக வரினும் மெய்யை நீக்கி அது ஒரே எழுத்தாகக் கொள்ளப்படும். நெடிலெழுத்து ஒரு சீரின் முதலிலோ இடையிலும் இறுதியிலும் தனித்தோ வந்தால் அது நேரசை ஆகும். அதுவே ஒரு குறிலைத் தொடர்ந்து வருமெனில் அந்தக் குறிலும் இந்த நெடிலும் சேர்ந்து நிரையசை என்று ஆகும். (உ-ம்)

சனாதனம்
இதை சனா/ தனம் என்று பிரிக்க வேண்டும். மெய்யை நீக்கி இரண்டு எழுத்துகள் இருந்தால் அதை நிரையசை என எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி

சனா- நிரையசை
தனம்-நிரையசை

ஒரு குறிலை அடுத்து ஒரு ஒற்று வந்தால் அந்த ஒற்றோடு சேர்த்து அந்தக் குறிலைப் பிரித்துவிட வேண்டும். மெய்யெழுத்திற்கு மதிப்பு இல்லையாகையால் ஒரு குறிலும் ஒரு மெய்யும் சேர்ந்து ஓரெழுத்தாகவே கருதப்படும். ஓரசையில் ஓரெழுத்து மட்டும் வந்தால் அது நேரசையாகும். இரண்டு எழுத்துகள் வந்தால் அது நிரையசையாகும்.(உ-ம்)

கம்யூனிசம்
இதை கம்/யூ/னிசம் என்று அலகிட வேண்டும். அதன்படி

கம்- நேரசை
யூ- நேரசை
னிசம்- நிரையசை

அதேபோல் சமத்துவம் என்பதை
சமத்/ துவம் என்று அலகிட வேண்டும். அதன்படி

சமத்- நிரையசை
துவம்- நிரையசை

யாப்பிலக்கணத்தில் அசை அலகிடுதல் மிக முக்கியம். அலகிடும் முறையைப் புரிந்துகொண்டால் போதும். கவிதை இயற்றுவது மிகவும் எளிதாகிவிடும்.

சீர்
சாதாரணமாக நாம் ‘வார்த்தை’ அல்லது ‘சொல்’ என்று சொல்வதைத்தான் யாப்பிலக்கணத்தில் ‘சீர்’ என்று சொல்கிறார்கள். எழுத்துகளாலானது அசை. அசைகளாலானது சீர். ஓரசையே ஒரு சீராக வருவதும் உண்டு. அதை ஓரசைச் சீர் என்று அழைப்பர். (உ-ம்)

பூ- நேரசை

சொல்- நேரசை

கனி- நிரையசை

சுவை- நிரையசை

ஈரசைச் சீர்கள் நான்கு இருக்கின்றன.

நேர்+நேர் தேமா (உ-ம்) வா/னம் (வானம்)

நிரை+நேர் புளிமா நில/வு (நிலவு)

நேர்+நிரை கூவிளம் கார்/முகில் (கார்முகில்)

நிரை+நிரை கருவிளம் கதி/ரவன்(கதிரவன்)

மூவசைச் சீர்கள் மொத்தம் எட்டு. அவற்றுள் காய்ச்சீர்கள் நான்கும் கனிச் சீர்கள் நான்கும் இருக்கின்றன.

காய்ச்சீர்கள்

நேர்+நேர்+நேர் தேமாங்காய் (உ-ம்) எண்/ணங்/கள் (எண்ணங்கள்)

நிரை+நேர்+நேர் புளிமாங்காய் விருப்/பங்/கள் (விருப்பங்கள்

நேர்+நிரை+நேர் கூவிளங்காய் சிந்/தனை/கள் (சிந்தனைகள்)

நிரை+நிரை+நேர் கருவிளங்காய் மனக்/குழப்/பம் (மனக்குழப்பம்)

கனிச்சீர்கள்

நேர்+நேர்+நிரை தேமாங்கனி (உ-ம்) கூவும்/குயில் (கூவும்குயில்)

நிரை+நேர்+நிரை புளிமாங்கனி அக/வும்/மயில் (அகவும்மயில்)

நேர்+நிரை+நிரை கூவிளங்கனி ஓ/டிடும்/முயல் (ஓடிடும்முயல்)

நிரை+நிரை+நிரை கருவிளங்கனி மலர்/களின்/மணம் (மலர்களின்மணம்)

இன்னும் நாலசைச் சீர்கள் மொத்தம் பதினாறு இருக்கின்றன. அவை கவிதைகளில் மிக அருகியே வரும். அவற்றைப் பற்றி நாம் தற்பொழுது அறிந்துகொள்ளத் தேவையில்லை. ஓரளவு யாப்பிலக்கணத்தில் தேர்ச்சி பெற்ற பின்னர் அவற்றைத் தெரிந்துகொள்ளலாம். ஈரசைச் சீர்களும் மூவசைச் சீர்களும்தான் அனைத்துப் பா மற்றும் பாவினங்களில் பயின்றுவரும். ஓரசைச் சீர்களும் நாலசைச் சீர்களும் புள்ளிப் பூஜ்யம் ஒரு விழுக்காடு கூட வராது. எனவே அவற்றைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

எழுத்து, அசை மற்றும் சீர் ஆகிய மூன்று உறுப்புகளைப் பார்த்தோம். மீதமுள்ள மூன்று உறுப்புகளையும் அடுத்த வாரம் பார்ப்போம். அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் பாக்கள் பற்றியும் பாவினங்கள் பற்றியும் விரிவாகப் பார்ப்போம். (தொடரும்)

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *