எளிதாக இலக்கணம் கற்கலாம்…அலுப்பின்றி யாப்பு – 3

3)அளவடி

நான்கு சீர்களைப் பெற்றுவரும் அடி அளவடி எனப்படும். நான்கு சீர்களைக் கொண்ட அடி, மற்ற எண்ணிக்கையில் சீர்களைப் பெற்றுவரும் அடிகளோடு ஒப்பிடும் போது, தலையாய அடி என்று கருதப்படுகிறது. எனவே இதை நேரடி என்றும் அழைக்கின்றர். (நேர் என்ற சொல்லுக்குத் தலைமை என்பது பொருள்).

நேரடி அல்லது அளவடி வரும் இடங்கள்:

1)வெண்பாக்களில் ஈற்றடி தவிர மற்ற அடிகள்
2)நிலைமண்டில ஆசிரியப்பா
3)நேரிசை ஆசிரியப்பாவில் ஈற்றயலடி தவிர மற்ற அடிகள்
4)இணைகுறல் ஆசிரியப்பாவில் பெரும்பான்மையான அடிகள்
5)அடிமறிமண்டில ஆசிரியப்பா
6)கலிப்பாவில் தரவு-தாழிசை அடிகள் மற்றும் அம்போதரங்க உறுப்பில் சில அடிகள்
7)வெண்டாழிசை
8)வெண்டுறை
9)ஆசிரியத்தாழிசை
10)ஆசிரியத்துறை
11)கலித்தாழிசை
12)கலிவிருத்தம்

மேலே குறிப்பிடப்பட்ட மற்றும் இன்னும் சொல்லப்படவுள்ள பாக்கள், பாவினங்கள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகள் குறித்தெல்லாம் இனிவரும் வாரங்களில் நாம் விரிவாகப் பார்க்கவிருக்கிறோம். எனவே அவற்றின் பெயர்களைப் பார்த்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.

எடுத்துக்காட்டு:

கலிவிருத்தம்

இன்பூறும்! இசையூறும்! இதயத்துள் இனிப்பூறும்
அன்பூறும்! அருளூறும்! அருந்தமிழின் அமுதூறும்!
என்பூறும் குருதியென எந்நொடியும் நினைவூறும்!
வென்றூறும் கனவுகளால் என்றென்றும் சுகமூறும்!
– பாட்டரசர் கி பாரதிதாசன்

தரவு கொச்சகக் கலிப்பா

தேடிக் குவித்தசெல்வம் தேங்கிக் கிடக்குமங்கே!
ஓடித்திரிந்த நிலம் ஒன்றும் மறைவதில்லை
கூடிக் களித்தநட்பு கூடிப் பார்த்திருக்கும்!
நாடித் துடிப்படங்கி நாம்செத்த பின்னருமே!
– மனோந்திரா

4)நெடிலடி

ஐந்து சீர்களைப் பெற்றுவரும் அடி நெடிலடி எனப்படும். அளவடியைத் தாண்டி நெடு நெடுவென வளர்ந்திருக்கின்ற காரணத்தால் இது நெடிலடி எனப் பெயர்பெற்றது. நெடிலடி வரும் இடங்கள்:

கலித்துறை
கட்டளைக் கலித்துறை
குறட்டாழிசை
குறள் வெண்செந்துறை
வெளிவிருத்தம்
வெண்டுறை
ஆசிரியத்தாழிசை
ஆசிரியத்துறை
கலித்தாழிசை

(எ-கா)

    கலித்துறை


    ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ?
    வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?
    தோழமை என்றவர் சொல்லிய சொல்ஒரு சொல்லன்றோ?
    ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ?
    – கம்பராமாயணம் குகப்படலம்-2405

    கட்டளைக் கலித்துறை

    திருப்பம் வருமென்றே நானும் திருப்பதி சென்றுவந்தேன்
    விரும்பி இறையிடம் பற்பல வேண்டுதல் செய்துவந்தேன்
    உருப்படும் வாழ்வென்றே காசினை உண்டியல் சேர்த்துவந்தேன்
    திருப்பம் வரவிலையே நான்தான் தெருவை அடைந்தேனே!
    -மனோந்திரா

    5)கழிநெடிலடி
    ஆறு சீர்களையும் அதற்கு மேலுமுள்ள சீர்களையும் பெற்று வரும் அடிகள் கழிநெடிலடிகளாகும். இயல்பைவிட நீண்ட நெடிய அடிகளாக வருவதால் இவ்வகை அடிகளுக்கு இப்பெயர் வரப்பெற்றது. கழிநெடிலடி வரும் இடங்கள்:

    கலிப்பாவில் வண்ணக உறுப்பில் வரும்

    குறட்டாழிசை
    வெளிவிருத்தம்
    வெண்டுறை
    ஆசிரியத் தாழிசை
    ஆசிரியத்துறை
    ஆசிரிய வவிருத்தம்
    (எ-கா)

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய.விருத்தம்

    பச்சைமா மலைபோல் மேனி
    பவளவாய் கமலச் செங்கண்
    அச்சுதா, அமரர் ஏறே,
    ஆயர்தம் கொழுந்தே என்னும்
    இச்சுவை தவிர யான்போய்
    இந்திர லோகம் ஆளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன்
    அரங்கமா நகரு ளானே!
    -தொண்டரடிப்பொடி ஆழ்வார்

    ஆறுசீர்களையும் ஒரே அடியில் எழுதிவிட முடியாது. ஆகவே, முதலடியில் மூன்று சீர்களையும் அடுத்த அடியில் மோனை வருமிடத்தில் மடக்கி, (இரண்டு அரையடிகளும் ஒரே அடிதான் என்பதைக் குறிக்கும் வகையில்) இரண்டாவது அடியை சற்று இடைவெளி விட்டு எழுதுகிறோம்.

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    திருப்பரங் குன்றத் திருமலை மேலே
    திருவிளக் கேற்றிடும் நாளில்
    உருப்படி யாக இதுவரை தீபம்
    உலகினர் ஏற்றியே வந்தார்
    ஒருதருக் காதான் உச்சியில் இருக்க
    ஒருசிலர் அதயே உடைக்க
    அருகினில் கற்றூண் இருந்திடக் கண்டே
    அதில்விளக் கேற்றிட வந்தார்
    – மனோந்திரா

    6- தொடை

    இதுவரை செய்யுள் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை மற்றும் அடி ஆகியவற்றைப் பார்த்தோம். மீதம் இருக்கின்ற உறுப்பு தொடை மட்டுமே. அதைத் தற்பொழுது விரிவாகப் பார்ப்போம். தொடையற்ற பாடல் நடையற்றுப் போகும் என்பது பழமொழி. இதிலிருந்து ஒரு பாட்டிற்குத் தொடையின் முக்கியத்துவம் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். மோனை, எதுகை, முரண், இயைபு மற்றும் அளபெடை என ஐந்து தொடைகள் இருக்கின்றன. இவற்றைத் தவிர செந்தொடை, இரட்டைத் தொடை மற்றும் அந்தாதித் தொடை ஆகிய முன்று தொடைகளும் இருக்கின்றன. முதலில் மோனையைப் பார்ப்போம்.

    (1) மோனை

    முதற்சீரின் முதலெழுத்தும் அதனைத் தொடர்ந்து வரும் சீர்களின் முதலெழுத்தும் ஒன்றி வருவது மோனை எனப்படும். மோனைகள் அமையும் இடத்தைப் பொருத்து அவைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. மோனை இருவகைப்படும். அவை 1) அடி மோனை 2) சீர் மோனை என்பவையாகும்.

    (1)(அ) அடி மோனை
    அடிதோறோம் முதலெழுத்து ஒரே எழுத்தாக வருவது அடி மோனையாகும்.

    (எ- கா)
    தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
    தன்நெஞ்சே தன்னைச் சுடும்
    -குறள்- 293

    இதில் த என்ற எழுத்து இரண்டு அடிகளிலும் முதற்சீரின் முதல் எழுத்தாக வந்துள்ளது.

    பாட்டுப் பாடவா….
    பார்த்துப் பேசவா….
    பாடம் சொல்லவா…
    பறந்து செல்லவா
    -கவியரசு கண்ணதாசன்

    மேற்கண்ட பாடலில் ‘பா’வும் ‘ப’வும் ஒன்றுக்கொன்று மோனையாகி அடிதோறும் முதலெழுத்தாக வந்துள்ளன. மேலும் கீழ்க்கண்ட பாடல்களிலும் அடிமோனை அமைந்திருப்பதைக் காண்க!

    பொத்திவச்ச மல்லிகை மொட்டு
    பூத்திருக்கு வெட்கத்தை விட்டு
    -கவிப்பேரரசு வைரமுத்து

    போனால் போகட்டும் போடா- இந்த
    பூமியில் நிலையாய் வாழ்ந்வர் யாரடா
    -கவியரசர் கண்ணதாசன்

    (1)(ஆ) சீர்மோனை
    ஓரடியிலுள்ள சீர்களில் மோனை அமைவது சீர்மோனை எனப்படும். அளவடியில், அதாவது நான்கு சீர்கள் கொண்ட அடியில், முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவதே சிறப்பு. இவ்வாறு அமையும் மோனைக்குப் பொழிப்பு மோனை என்று பெயர்.

    (எ- க)
    தரவு கொச்சகக் கலிப்பா

    வான்மேகக் கூட்டமொன்று வந்தென்னைத் தீண்டியது
    கூன்நிலவு மீன்களுடன் கூடிவிளை யாடியது
    தேன்வழியும் கானமதைத் தேக்கிவைத்த தென்றலது
    நான்பருகக் கானமதை நல்கிவிட்டுச் சென்றதங்கு
    -மனோந்திரா

    ஒரு குறிப்பிட்ட எழுத்திற்கு அதே எழுத்துதான் மோனையாக வரவேண்டும் என்று பார்த்தால் அது சற்று கடினமான காரியம். எனவே கீழ்க்கண்ட எழுத்துகளை ஒன்றுக்கொன்று மோனையாக்கி வைத்தனர் நம் முன்னோர்கள்.

    மோனைக்கு இனங்கள் அல்லது கிளைகள் பின்வருமாறு:

    உயிரெழுத்துகள்

    அ ஆ ஐ ஔ- ஓரினம்
    இ ஈ எ ஏ (யா)- ஓரினம்
    உ ஊ ஒ ஓ – ஓரினம்

    மேற்கண்ட உயிர்கள் ஏறிய உயிர்மெய் எழுத்துகள் ஒன்றுக்கொன்று மோனையாக வரும். (எ- கா)

    க கா கை கௌ- ஓரினம்
    கி கீ கெ கே – ஓரினம்
    கு கூ கொ கோ – ஓரினம்

    இதுவும் போதாதென்று, கவிதையில் கருத்துக் கெடாதிருக்கும் பொருட்டு, கீழ்க்கண்ட உயிர்மெய் எழுத்துகளை ஒன்றுக்கொன்று மோனையாக்கி வைத்தனர்.

    சகரத்திற்கு தகரம் மோனை
    ஞகரத்திற்கு நகரம் மோனை
    மகரத்திற்கு வகரம் மோனை

    மோனை ஏழு வகைப்படும். அவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்.
    மனோந்திரா (தொடரும்)

    1)https://maduraiseithi.in/manondiras-grammar-series-begins/

    2) https://maduraiseithi.in/manondiras-easy-grammar-series-2/

    இப்போதே பகிருங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *