எளிதாக இலக்கணம் கற்கலாம்: அலுப்பின்றி யாப்பு – 4

சென்ற வாரம் அடிமோனை, சீர்மோனை பற்றிப் பார்த்தோம். இந்தவாரம் மோனைகளின் வகைகளைப் பார்ப்போம். மோனையில் ஏழு வகைகள் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். நான்கு சீர்கள் மட்டுமே வருகின்ற அளவடியை மையமாக வைத்து, மோனை எவ்விடத்தில் அமைகிறதோ அந்த இடத்தைக்கொண்டு மோனையின் வகைகளுக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

1,இணைமோனை

நான்கு சீர்களைக் கொண்ட பாடல் ஒன்றில் முதல் இரண்டு சீர்களில் மோனை அமைவதை இணைமோனை என்கிறோம். இணைந்த இரண்டு சீர்களில் மோனை அமைவதால் அது இணை மோனையானது.

எடுத்துக்காட்டு:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (குறள்-45)
மேற்கண்ட குறளில் முதல் இரண்டு சீர்களில் ‘அ’ என்ற எழுத்து மோனையாக வந்துள்ளது.

திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை
ஊரெங்கும் பூவாசனை
(கவியரசு கண்ணதாசன்)

மேற்கண்ட பாடலில் முதலடியின் முதல் இரண்டு சீர்களும் தி என்ற எழுத்தில் தொடங்கி இணை மோனை பெற்றுள்ளன.

2.பொழிப்பு மோனை

முதற்சீரின் முதல் எழுத்தும் மூன்றாம் சீரின் முதல் எழுத்தும் ஒன்றி வருவது பொழிப்பு மோனை எனப்படு. அளவடி எனச் சொல்லப்படும் நான்கு சீர்கள் கொண்ட பாடல்களில் பொழிப்பு மோனைதான் பயன்படுத்தப்பட வேண்டும்.

(எ-க)
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

இக்குறளில் முதலடியின் முதலெழுத்து ம என்றும் மூன்றாம் சீரின் முதலெழுத்து மா என்றும் மோனை பெற்று வந்துள்ளது.

ஓராயிரம் பார்வையிலே உன்பார்வையை நானறிவேன்
உன்காலடி ஓசையிலே
உன்காதலை நானறிவேன்
(கவியரசு கண்ணதாசன்)

ஒகரமும் உகரமும் ஒன்றுக்கொன்று மோனையாக வரும் என்தை ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். அதன்படி முதலடியில் முதற்சீரின் முதல் எழுத்து ஓ வென வந்துள்ளது. மூன்றாம் சீரின் முதலெழுத்து உ வென வந்துள்ளது. இரண்டாவது அடியில் உ என்ற எழுத்திற்கு உ என்ற எழுத்தே மோனையாக வந்துள்ளதைக் காண்க! அதேபோன்று கீழ்க்கண்ட பாட்டில் இரண்டு அடிகளிலும் பொழிப்பு மோனை வந்திருப்பதைக் கண்டுகொள்க!

ஓடும் மேகங்களே! ஒருசொல் கேளீரோ?
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ?
(கவியரசு கண்ணதாசன்)

3.ஒரூஉ மோனை

முதற்சீரின் முதல் எழுத்தும் நான்காம் சீரின் முதல் எழுத்தும் ஒன்றி வருவது ஒரூஉ மோனை எனப்படும். ஒருவுதல் என்றால் நீங்குதல் என்றுபொருள். இரண்டாம் மற்றும் மூன்றாம் சீர்களை நீக்கி வருவதால் இது ஒரூஉ மோனையாகிற்று.

(எ-கா)
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் (குறள்-292)

இக்குறளின் முதற்சீரின் முதல் எழுத்தும் நான்காம் சீரின் முதல் எழுத்தும்(பொ – பு) ஒன்றிவந்து மோனை அமைந்துள்ளது. கீழ்க்கண்ட திரைப்படப் பாடலின் இரண்டு அடிகளிலும் முதற்சீர் மற்றும் நான்காம் சீர்களில் நா என்ற எழுத்தே முதல் எழுத்தாக வந்திருப்பதை அறிக!

நாடாளும் வண்ணமியில் காவியத்தில் நான்தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான்ஒருவன்
(கவியரசு கண்ணதாசன்)

4.கூழை மோனை

நான்காம் சீரைத் தவிர்த்து மற்றுள்ள முதல் மூன்று சீர்களிலும் மோனை அமைவது கூழை மோனை எனப்படும். கூழை என்றால் குறைவு என்பது பொருள். ஒருசீர் குறைந்து மோனை வருதலால் இது கூழை மோனையாயிற்று.
(எ-க)

செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை (குறள்- 411)

மேற்கண்ட குறளில் முதல் மூன்று சீர்களிலும் முதல் எழுத்தாக செ என்ற எழுத்தே வந்துள்ளது. கீழ்க்கண்ட பாட்டைப் பார்க்கவும்! இரண்டு வரிகளிலும் மிக அழகாகக் கூழை மோன அமைந்திருக்கிறது.

சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாருயிங்கே!
மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாருஅங்கே!
(மருதகாசி)

5.மேற்கதுவாய் மோனை
இரண்டாம் சீரைத் தவிர்த்து மற்ற ஒன்று, மூன்று மற்றும் நான்காம் சீர்களில் மோனை அமைவது மேற்கதுவாய் மோனை எனப்படும்.
(எ- க)

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன்- கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா
(நல்வழி – ஔவையார்)

மேற்கண்ட நேரிசை வெண்பாவின் முதல் அடியைக் காண்க! அதில் இரண்டாம் சீரைத் தவிர்த்து மற்ற மூன்று(1 3 4) சீர்களிலும் பகர வரிசை மோனை அமைந்திருப்பதை அறியலாம்.

எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என்தலைவன்
விட்டுவிட்டுச் சென்றானடி- இன்று
வேறுபட்டு நின்றானடி
(கவியரசு கண்ணதாசன்)

மேற்கண்ட பாடலின் முதலடியில் மேற்கதுவாய் மோனை நன்கு அமைந்துள்ளது. அதாவது முதற்சீர், மூன்றாம் சீர் மற்றும் நான்காம் சீர்களில் முறையே எ ஏ எ ஆகியவை முதல் எழுத்துகளாக வந்துள்ளன.

6.கீழ்க்கதுவாய் மோனை

    ஒன்று, இரண்டு மற்றும் நான்காம் சீர்களில் மட்டும் மோனை அமைவது கீழ்க்கதுவாய் மோனை எனப்படும்.
    (எ- கா)

    இருள்சேர் இருவினையுஞ் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
    (குறள்- 5)

    மேற்கண்ட குறளின் முதலடியில் இ என்ற எழுத்து ஒன்று, இரண்டு மற்றும் நான்காம் சீர்களின் தொடக்கத்தில் அழகுற அமைந்திருக்கிறது.

    மலர்ந்தும் மலராத பாதி மலர்போல
    வளரும் விழிவண்ணமே!- வந்து
    விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
    விளைந்த கலையன்னமே!
    (கவியரசர் கண்ணதாசன்)

    மலர்ந்தும் மலராத என்ற இரண்டு சீர்களும் நான்காம் சீராகிய மலர்போல என்ற சீரும் ‘ம’ என்ற ஒரே எழுத்தில் தொடங்கிக் கீழ்க்கதுவாய் மோனை பெற்றுள்ளன.

    7.முற்று மோனை

    நான்கு சீர்களிலும் அமையும் மோனை முற்று மோனை எனப்படுகிறது.
    (எ- கா)

    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை.

    முதல் அடியில் உள்ள நான்கு சீர்களும் து என்ற எழுத்தில் தொடங்கித் தலையாகு மோனை சிறப்பாக அமைந்துள்ளது.

    நான்கு சீர்கள் கொண்ட அடியில் எப்பொழுதும் பொழிப்பு மோனை அமைவதே சிறப்பு. தவிர்க்க முடியாத இடங்களில் இரண்டாம் சீரிலோ அல்லது நான்காம் சீரிலோ மோனைவைத்து எழுதலாம். மேலும் தலையாகு மோனை, இடையாகு மோனை மற்றும் கடையாகு மோனை குறித்தெல்லாம் போகப் போகத் தெரிந்துகொள்வோம். இப்போதைக்கு மோனை குறித்து இந்த அளவிற்குத் தெரிந்துகொண்டால் போதுமானது.

    (2) எதுகை

    எதுகை என்ற சொல்லுக்குப் பொருத்தம் என்று பொருள். அடிதோறும் முதலெழுத்து ஒன்றாமல் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தால் அது எதுகை எனப்படும். முதலடியின் முதற்சீர் நெடிலாக இருந்தால் இரண்டாம் அடியின் முதற்சீரின் முதலெழுத்தும் நெடிலாகவே இருக்க வேண்டும்; குறிலெழுத்தெனில் குறிலே வரவேண்டும். உதாரணத்திற்கு “கட்டம்” என்ற சொல்லுக்கு “வட்டம்” வருமெனில் அது சரியான எதுகை. அதற்குப் பதிலாக “வாட்டம்” என்று வருமெனில் அது எதுகையாகாது. மோனையில் நாம்பார்த்த அத்தனை வகைகளும் எதுகைக்கும் பொருந்தும். முதலெழுத்தைத் தவிர மற்ற அனைத்து எழுத்துகளும் ஒன்றி வந்தால் அது தலையாய எதுகையாகும்.

    (எடுத்துக்காட்டு)

    பால்வண்ணம் பருவம் கண்டு
    வேல்வண்ணம் விழிகள் கண்டு
    (கவியரசு கண்ணதாசன்)

    முதலடியில் வந்த ‘பால்வண்ணம்’ என்ற சீரின் முதலெழுத்தும் அடுத்த அடியிலுள்ள ‘வேல்வண்ணம்” என்ற சீரின் முதலெழுத்தும் வெவ்வேறு எழுத்துகள். மற்ற அனைத்து எழுத்துகளும் ஒன்றி வந்துள்ளன. இப்படி எல்லா நேரங்களிலும் எழுதுதல் கடினம். எனவே இரண்டாம் எழுத்து ஒன்றிவர எழுதினால் போதும். அடுத்த வாரத்தில் எதுகை குறித்து விரிவாகப் பார்ப்போம்.

    • மனோந்திரா (தொடரும்)

    1)https://maduraiseithi.in/manondiras-grammar-series-begins/

    2)https://maduraiseithi.in/manondiras-easy-grammar-series-2/

    3)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-ease-3/

    இப்போதே பகிருங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *