
மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(மார்ச் 7) சந்தித்து விடை கொடுத்தார்.
தமிழ்நாட்டின் 15-வது ஆளுநராக கடந்த 2021 செப்டம்பர் 18-ம் தேதி பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி தற்போது மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த போது, ஆளும் திமுகவுடன் மோதல் போக்குடன் நடந்து கொண்டார். அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்த்த அவர் பட்ஜெட் கூட்டங்களில் இருந்து தொடர்ந்து வெளிநடப்பு செய்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்கிய அவர், நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை கிடப்பில் போட்டதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வந்த சி.வி.ஆனந்த போஸ் தனது பதவியை மார்ச் 5 -ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக, ஆா்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநா் பொறுப்பை கேரள மாநில ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் கூடுதலாக வகிப்பாா் என குடியரசுத் தலைவா் அறிவித்துள்ளார். இந்த நிலையில், சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து விடை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



