
குடிபோதையில் தாக்கிய மகனை தாய் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தை அடுத்த கலைக்கோவில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லதா (56). இவர்களுக்கு மாயாண்டி(27) என்ற மகனும், மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். கண்ணனும், அவரது மகன் மாயாண்டியும் கிருஷ்ணாபுரம் பஸ்நிலையம் அருகே கறிக்கடை நடத்தி வந்தனர்.
கறிக்கடையின் வருமானம் அனைத்தையும் எடுத்து மாயாண்டி மது குடித்ததுடன், தட்டிக்கேட்ட தந்தை கண்ணனுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அத்துடன் வருமானத்தை வீட்டிற்கு கொடுக்காததால் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், வழக்கம் போல நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு சென்ற மாயாண்டி, தாய் மற்றும் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டதுடன் கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளார். அத்துடன் அவரது தாய் லதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அவரிடம் தப்பிக்க முயன்ற தாயை மீண்டும் தாக்கியுள்ளார்.
இதனால் அருகில் இருந்த கத்தியை எடுத்து லதா தாக்கியுள்ளார். இதில் , மாயாண்டியின் நெஞ்சில் கத்திக்குத்து விழுந்தது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தனது மகனை கொலை செய்து விட்டதாக காவல்துறைக்கு லதா தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த சிவந்திபட்டி போலீஸார், மாயாண்டி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட லதாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



