
சீமான்
தமிழ்நாட்டிற்கு 5 தலைநகர் அமைக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் வேட்பாளர்களை சீமான் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதில் 117 ஆண்கள், 117 பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் உள்ள கிண்டியில் இன்று (மார்ச் 19) வெளியிட்டார். மொத்தம் 49 தலைப்புகளில் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டு இருந்தன.
அந்த தேர்தல் அறிக்கையில், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரங்கள் அமைக்கப்படும். திருச்சி நிர்வாகத் தலைநகராகவும் கோவை வணிகத் தலைநகராகவும் இருக்கும். கன்னியாகுமரி மெய்யியல் தலைநகராக உருவாக்கப்படும். மதுரை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகரம். ஜப்பானின் கியோட்டோ நகரம் அதன் பண்பாட்டினைப் பிரதிபலிப்பது போல, மதுரையும் தமிழின் அடையாளம் மற்றும் நீதிக்கான மையமாகத் திகழும்.
சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு, தமிழ் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படும்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு என தனித் தொகுதிகள் போராடிப் பெறப்படும். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது உறுதி செய்யப்படும். தமிழ்நாட்டுக்கு உள்ளே, ரயில்வே நிர்வாகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்.
அடிப்படைத் தேவையான குடிநீர் விற்பனை முறை ஒழிக்கப்பட்டு, தூய குடிநீர் இலவசமாக வழங்கப்படும், மேலும் இயற்கை மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, சித்த மருத்துவ அமைச்சகம் உருவாக்கப்படும். மது, புகையிலை, கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருள்கள் ஒழிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.




good performence.