
நயினார் நாகேந்திரன்
ரஜினிகாந்த் ரசிகர்களிடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தவெக சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக் குழு மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,” திரைப்படத் துறையில் 50 ஆண்டுகளாகக் கோலோச்சிவரும் சிறந்த கலைஞர், உலகளவில் தமிழ்த் திரைப்படத்தின் முகமாகத் திகழ்பவர், வாழ்நாள் சாதனையாளர் விருது, தாதா சாகேப் பால்கே விருது, பத்ம விபூஷண், பத்ம பூஷண், போன்ற பல முக்கிய விருதுகளைப் பெற்று திரைத்துறையின் இமையத்தைத் தொட்டவர், சிறந்த ஆன்மிகவாதி எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். மேலும் அனைத்து மூத்த தலைவர்களின் அன்பையும், பிரதமர் நரேந்திர மோடியின் மரியாதையையும் பெற்றவராகத் திகழ்பவர். சாதி, மதம், மொழியைக் கடந்து அனைத்துத்தரப்பட்ட மக்களின் பேரன்பைப் பெற்றவர்.
அத்தகைய சிறந்த பண்பாளரைக் குறித்து தவெகவைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தவறாகப் பேசுவது என்றும் ஏற்புடையதல்ல! அதைப் பார்த்துக் கொண்டு அவரின் ரசிகர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். பத்திரிகைகளின் கவனத்தைப் பெறுவதற்காக, தமிழக மக்களின் பேரன்பிற்குச் சொந்தக்காரரான ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியதை அக்கட்சியின் தலைவர் கண்டிப்பதோடு, இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற அறிவுரையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், ரஜினி காந்த் ரசிகர்களிடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



