
மனிதனுக்கு நினைவு ஒரு வரம். அதே சமயம் சாபம். வயதாக ஆக, மனிதனுக்கு ஒவ்வொரு நிகழ்விற்கும், சொல்லிற்கும், பாட்டுக்கும்,பாட்டின் வரிக்கும், அதன் ஒரே ஒரு சொல்லிற்கும் கூட ஏதேனும் ஒரு நினைவு வந்துவிடுகிறது. ஒவ்வொன்றிற்கும் ஏதோ நினைவுகள்… கனவுகள்…. காவேரி ஊற்றாகவே… காற்றோடு காற்றாகவே இன்பமாகவும், துன்பமாகவும்.வந்து கொண்டே தான் இருக்கின்றன. இதில் மிகப்பெரிய பங்கு திரைப் பாடல்களுக்குத்தான். எல்லோருக்குமே ஒவ்வொரு பாடலுக்கும் நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டுதானே?
இளையராஜா பாடல்
இந்தத் தொடரை ஆரம்பித்தாயிற்று. காலை நடைப்பயிற்சியின் போது எந்தப் பாடலை வைத்து அடுத்த கட்டுரை என்று யோசித்தபடியே நடக்கிறேன். முன்னால், பின்னால் என்னைப் போல நடந்து செல்லும் பல பூமர்களும் ஏனோ ஹெட்போன் பயன்படுத்துவதில்லை. மகன் வேலை பார்க்கும் நிறுவனம் தந்த நிறுவனப் பெயர் பொறித்த டீசர்ட்டை அவன் தூக்கிப் போட்டவுடன் எடுத்துப் போட்டுக் கொண்டு, அதன் பையில் கைப்பேசியை வைத்துக் கொண்டு, ஏதேனும் ஒரு யூட்யூப் பாடல் வரிசையை சத்தமாக ஒலிபரப்பிக் கொண்டு நடப்பார்கள்.
பொதுவாக இந்தப் பழக்கம் எனக்கு எரிச்சல் தந்தாலும், சமயங்களில் இன்பமாக இருக்கும். அவர் கேட்கும் பாடலை ஒட்டுக் கேட்டுக் கொண்டே செல்லும் வகையில் அவரது வேகத்திற்கு இணையாக அந்த பாடல் முடியும் வரை நானும் நடப்பேன். அப்படி இன்று நான் கேட்ட பாடல் என்னுள் கிளர்த்திய நினைவுகள் அந்தப் பாடலைப் போலவே இனிமையானவை.
அது இளையராஜாவின் ஆரம்ப காலப் பாடல். அன்றைய காலத்தின் நிர்ப்பந்தத்தில் எம்.எஸ்.வி பாணியில் இளையராஜா போட்ட பாடல் அது. எம்.எஸ்.வி பாணியிலான அந்தப் பாட்டின் புல்லாங்குழலிசையில் நான் ஐம்பதாண்டுகள் பின்னால் போய் எங்கள் வீட்டிற்கு நான்கு வீடுகள் தள்ளி இருந்த சகுந்தலாக்கா வீட்டில் போய் விழுகிறேன். சகுந்தலாக்கா பின்னாளில் எனக்கு அறிமுகமான மஞ்சுபார்கவி போல் வாட்டசாட்டமாக இருப்பார்கள்.
அன்னக்கிளி புடவை
என் அம்மாவை விட சற்று இளையவர் என்றாலும் அம்மாவின் சினேகிதி. ஏறு நெற்றியை மறைக்க செக்கச்சிவந்த சிங்கார் சாந்தில் பெரிய நாமம் போட்டிருப்பார். அவர்கள் வீட்டில் கல்கண்டு, வானொலி, விகடன் எல்லாம் வாங்குவார்கள். நாங்கள் ஓசி வாங்கிக் கொள்வோம். அக்கா வீட்டுக்காரர் ஏதோ தனியார் பஸ் கம்பெனியில் கண்டக்டராக இருந்தார். எப்போது வீட்டுக்கு வருவார், போவார் என்பதே தெரியாது. பெரிய குடிகாரர் என்பார்கள்.
பெரும்பாலும் கம்பெனி ஷெட்டிலேயே தங்கிவிடுவாராம். அக்காவிற்கு கல்யாணமாகி பத்து வருடங்களாகியும் குழந்தை இல்லை. அதனால் இயல்பாகவே என்மீது ரொம்பவும் பாசமாக இருப்பார். ”பேசாம இவன எங்கிட்ட குடுத்துடுங்க,“ என்று என் அம்மாவிடம் அடிக்கடி சொல்வார். “தாராளமா கூட்டிட்டுப் போ.. என்னால மேய்க்க முடியல்ல,“ என்பாள் அம்மா. “அக்கா, தம்பி என்ன ஆடா, மாடா, ஏன் மேய்க்கணும்னு சொல்றீங்க?“ என்பார் சகுந்தலாக்கா. அவர்களிருவரும் அப்படித் தான் பேசிக் கொள்வார்கள். அந்த வருட தீபாவளிக்குக் கூட இருவரும் ஒரே மாதிரி அன்னக்கிளி புடவைதான் வாங்கி இருந்தார்கள்.
வானொலி அக்காக்கள்
இன்று பெண்களுக்கு ஒரே துணையாக கைபேசி இருப்பது போல அன்று வானொலி. எல்லா அக்காக்களைப் போலவே சகுந்தலாக்காவும் எல்லா சினிமாப் பாட்டையும் வரி மாறாமல் பாடுவார். எல்லா அக்காக்களுக்குமே அக்காலத்தில் பி.சுசீலாவின் குரல்தான். குழந்தைப் பேறுக்காக வியாழக்கிழமை தோறும் மாலையில் ராகவேந்திர மடம் போவார். ஆண் துணை யார் என்று தனியாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கே அது தெரிந்திருக்கும். ஒரு வியாழனன்று அக்காவுடன் ராகவேந்திர மடத்திற்குச் செல்வதற்காக அவர்கள் வீட்டிற்குப் போனேன். அக்கா ஜேசுதாஸாகவும், சுசீலாவாகவும் மாறி மாறி பாடிக் கொண்டே மேக்கப் போட்டுக் கொண்டிருந்தாள். சிந்தால் பவுடரின் மணத்தை மீறி அக்காவிடமிருந்து மைசூர் சாண்டல் சோப் வாசனை.
அக்கா ஜேசுதாஸ் குரலில்
மஞ்சள் கொண்டு நீராடி
மைக்குழலில் பூச்சூடி…
வஞ்சிமகள் வரும் போது
ஆசை வரும் ஒருகோடி.. என்று முடித்து
கண்ணுக்கு மையிட்டுக் கொண்டே, சுசீலா குரலில்
கட்டழகன் கண்களுக்கு
மை எடுத்து எழுதட்டுமா…
கண்கள் படக் கூ….டும் என்று
பொட்டு ஒன்று வைக்கட்டுமா… என்று பாடியபடி என்னைப் பார்த்து “வாடா“ என்றார். என்ன தோன்றியதோ, சட்டென்று என் கன்னத்தில் சின்னதாக மையில் பொட்டு வைத்துவிட்டு, “அழிச்சுறாத.… மூஞ்சி பூரா இழுவிறும்..” என்றார். அந்த திருஷ்டிப் பொட்டோடு கோவிலுக்குப் போய்விட்டு, எங்கள் வீட்டிற்கு வந்தோம்.
“சகுந்தலா, புருஷக் கொளந்தைக்கு ஒரு வயசுக்கு மேல மைல பொட்டெல்லாம் வெக்கக் கூடாது. அப்பறம் சபைக் கூச்சம் வந்துடும்,“ என்றார் என் அம்மா கோபமாக. அக்கா, “சரிக்கா,“ என்றார்.
என் திருமணத்திற்கு சகுந்தலாக்கா பின்னாளில் தங்கம் சீரியலில் வந்த மஞ்சு பார்கவி கெட்டப்பில் வந்திருந்தார். அழகிகளில் முன்னாள் ஏது? பின்னாள் ஏது? எப்போதும் அழகிகள்தானே !“என்னக்கா, உங்காட்கள்ல கல்யாண மாப்பிள்ளைக்கு கன்னத்துல திருஷ்டி பொட்டு வெப்பீங்கல்ல? அதப் பாக்கத் தா ரிசப்ஷனுக்கு வராம முகூர்த்தத்துக்கு வந்தேன் !“ என்றார் அம்மாவிடம். “உனக்கு எதுவுமே மறக்காதுடி சகுந்தலா,“ என்றாள் அம்மா சந்தோஷமாக.
உண்மையில் வெகுகாலத்திற்கு நான் கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் அம்மா குழந்தை பாசப் பாடல் என்றே நினைத்திருந்தேன். பின்னாளில் அந்தப் பாடல் காட்சியை, சிவகுமாரின் கோணங்கித்தனமான நடிப்பை பார்க்கும் போது நொந்து போனேன். அதே போல், கண்ணன் பாடல் என்பதால் அது கண்ணதாசன் பாடல் என்ற நினைப்பும் இருந்தது. ஆனால், எழுதியது வாலி்.
திருஷ்டிப் பொட்டு
தமிழில் காதலன் அல்லது கணவன், காதலி அல்லது மனைவியை வர்ணித்து கொஞ்சும் பாடல்கள்தான் அதிகம். மனைவி கணவனை குழந்தையாக பாவித்து, யாரும் கண்பட்டுவிடக் கூடாது, என்று திருஷ்டிப் பொட்டு வைக்க வேண்டும் என்பதாகக் கூறும் பாடல் இது ஒன்று மட்டும்தான் என்று நினைக்கிறேன்!
அதிலும் சற்று அதிகமாகக் கண்பட்டுவிடுமோ என்று கண்கள் படக்கூ….டும் என்று சுசீலாம்மா அந்த கூவிற்குத தரும் கூடுதல் கார்வையை நினைத்தால் புல்லரிக்கிறது.
பாட்டைக் கேட்கும் போதெல்லாம் அந்தக் கூ…டும் என்று என்ற வரி வரும் போது, சுசீலாம்மாவை விட சகுந்தாலக்கா அந்த கூ… விற்கு உதடு குவித்துக் கொடுத்த எக்ஸ்ட்ரா கார்வைதான் கண்முன்னே நின்று, என் மனதை நிறைக்கிறது. ( தொடரும்…)
-ச.சுப்பாராவ்
1.https://maduraiseithi.in/s-subbarao-writes-ninaive-sangeetham1/




மிக அருமையான தொடக்கம்.
நினைவுகளைக் கிளறக் கூடிய பாடல்களுடன், சிறு வயதில் பழகிய, பார்த்த மதுரை நகர மக்களையும் இந்தத் தொடரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நன்றி. நிறைய மதுரை மக்கள் தத்தம் பாடல்களோடு வர இருக்கிறார்கள்.
மிக மிக அருமை. தன்னையே சுசீலாவாக பாவித்து பாடல்களை மனதில் நினைந்து அனுபவித்துப் பாடும் சகுந்தலா அக்கா போன்றவர்களில் நானும் உண்டு. தாங்கள் பாடல் வரிகளை இயல்பாக ஆங்காங்கே சேர்த்திருப்பதை மிகவும் ரசித்தேன். கண்திருஷ்டி படும் என்று நினைக்கும் அளவுக்கு அதிகமான அன்பு கொண்ட மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம். மேலும் மேலும் படிக்க ஆவல். மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 😊💐🙏🙏
நன்றியும், மகிழ்ச்சியும்.
இளையராஜாவின் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று. பாடல் அம்மாஞ்சியாக காட்டும் சிவகுமார் ஐ சொன்னீர்கள் காயத்ரி ( ராணி சந்திரா) நினைவுக்கு வரவில்லை. போகட்டும் சுசிலா அம்மா வை பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி பல