திமுகவில் இணையும் ஓபிஎஸ்?: முதல்வரை சந்தித்த பின் பரபரப்பு பேட்டி

ஓ.பன்னீர்செல்வம்

ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சி சிறப்பாக இருந்தது, இதற்கு வாழ்த்து தெரிவிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை நடைபெற்று வருகிறது. இன்றுடன் கூட்டத் தொடர் நிறைவடைகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இன்னும் இரண்டு மாதங்களில் மீண்டும் திமுக தான் ஆட்சியமைக்கும் என்று உறுதிபட பேசினார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்எல்ஏவான ஐயப்பனின் பேச்சு சட்டப்பேரவையில் அமைந்தது. அப்போது அவர் கூறுகையில், வருகின்ற சட்டமன்றத்தேர்தலிலும் முக ஸ்டாலின் தான் வெற்றிபெற்று மீண்டும் முதல்வராக வேண்டும், முதல்வர் ஐயாயிரம் கொடுத்துவிட்டார் என கூறி அந்த திட்டத்தை இந்த அவையில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால், அவர்கள் காலை உணவு திட்டத்தை ஏன் பாராட்டவில்லை ? ஆரம்பப்பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு காலை உணவு வழங்கி அந்த குழந்தைகளுக்கு ஒரு தாயாக இருந்து வருகின்றார் வருகின்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைத்து முக ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆசியோடும், புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் ஆசியோடும் மீண்டும் மீண்டும் முக ஸ்டாலின் தான் முதல்வராக வர வேண்டும் என எங்கள் அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் வாழ்த்துகளோடு கூறுகின்றேன் என்று ஐயப்பன் பேசினார். இதற்கு திமுக தரப்பினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் சந்தித்தார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். இந்த சந்திப்பில் ஓ பன்னீர் செல்வம் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சி சிறப்பாக இருந்தது, இதற்கு வாழ்த்து தெரிவிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தேன். திமுகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சி சிறப்பாக இருந்ததால், மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. மக்கள் நினைப்பதை தான் எனது ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் சட்டமன்றத்தில் பேசியுள்ளார் ” என்று கூறினார். அப்போது திமுகவில் இணைவீர்களா என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு”பொறுத்திருந்து பாருங்கள்” என்று அவர் பதிலளித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *