மத்திய தொகுதியில் மீண்டும் களமிறங்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

விருப்ப மனுவை தாக்கல் செய்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

மதுரை மத்திய தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கழக உடன்பிறப்புகளில் ஒருவனாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தேன். 30 ஆண்டுகளாக அயல்நாடுகளில் உலகளாவிய கல்வி நிறுவனங்களில் பயின்று, கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர்பொறுப்புகளை வகித்த பின், எனது முன்னோர்கள் காட்டிய வழியினை பின்பற்றி, பொது வாழ்விற்குள் நுழைந்தபோது, 10 ஆண்டுகள் மக்கள் பணியில் ஈடுபட்டு பின்னர் மீண்டும் எனது சொந்த தொழில்முறை துறைக்குத் திரும்புவேன் என்று தெரிவித்திருந்தேன்.

ஆனால், என் தொகுதி வாக்காளர் பெருமக்கள் முதல் தேர்தலில் அளித்த ஆதரவை விட அதிகமான வாக்குகளால் இரண்டாம் முறை வெற்றி பெறச் செய்தது மட்டுமன்றி, என் பாசத்திற்குரிய தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது தலைமையிலான அமைச்சரவையில் பணியாற்றும் அரிய வாய்ப்பை வழங்கினார். அதன் மூலம், என் வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மக்கள் நலனிலும் மாநில முன்னேற்றத்திலும் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும் பணிகளை நிறைவேற்றும் நற்பேறு கிடைத்தது. மேலும், எனது முன்னோர்கள் தங்கள் பொது வாழ்விற்கு எந்த வரையறையும் இன்றி தமது வாழ்நாள் முழுவதும் மக்கள் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதை நினைவில் கொண்டு, அவர்கள் பாதையைப் பின்தொடர முடிவு செய்துள்ளேன்.

அவ்வகையில், மீண்டும் ஒருமுறை கழகத் தலைவரிடம், எனது பொது வாழ்க்கையைத் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வாய்ப்பு கோரி, இன்று கழக தலைமையகத்தில் மூன்றாவது முறையாக மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவைச் சமர்ப்பித்தேன். கழகத் தலைவர் வாய்ப்பளித்தால் எனது தொகுதி மக்களிடம், பத்தாண்டுகளாக எனக்கு அளித்து வந்த மகத்தான ஆதரவை, இம்முறையும் தொடர்ந்து வழங்கிடக் கோருவேன்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *