டி20 சூப்பர் 8… பாகிஸ்தான், நியூசிலாந்து இன்று மோதல்!

பாகிஸ்தான், நியூசிலாந்து வீரர்கள்

டி20 உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்றுகள் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து மோதுகின்றன.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவடைந்தது நடப்பு சாம்பியனான இந்தியா, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியனான இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, இத்தாலி, நேபாளம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று (21-ம் தேதி) தொடங்குகிறது. இதில் விளையாடும் 8 நாடுகளும் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டன.
குரூப் 1 பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளும், குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து , பாகிஸ்தான், இலங்கை அணிகளும் இடம்பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பில் நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி சேப்பாக்கத்தில் நடந்த 3 போட்டியிலும் வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது. சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி நெதர்லாந்து, அமெரிக்கா, நமீபியா அணிகளை வீழ்த்தியது. இந்தியாவிடம் 61 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தமட்டில் சுழற்பந்துவீச்சு அவர்களுக்கு சாதகமாக உள்ளது. இரு அணிகளைப் பொறுத்தமட்டில் பந்துவீச்சு சரிசம பலமாக இருக்கிறது. ஆனால், பேட்டிங்கில் பாகிஸ்தானைக் காட்டிலும் நியூசிலாந்தே வலுவாக இருக்கிறது. இதனால், இன்றைய போட்டியில் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும் அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரையிறுதிக்கு முன்னேற சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *