
காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சுப்பிரமணியபுரம் தெற்கு முதல் வீதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனான சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு ஆண்டியப்பன் (47) என்பவர் காவலாளியாகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் காவலாளி ஓய்வெடுக்கச் சென்ற நேரத்தில், அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் குண்டுகளை அலுவலகத்தை நோக்கி வீசியுள்ளனர். இதில் ஒரு பாட்டில் தரையில் பட்டு சிதறியது. மற்றொரு பாட்டில் அருகில் இருந்த புல்வெளியில் விழுந்ததால் வெடிக்கவில்லை. இன்று காலை காவலாளி வந்து பார்த்தபோதுதான் இந்த தாக்குதல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த தாக்குதலுக்கு முன்னதாக, அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அந்தப் பகுதியில் இருந்த ஒரு சிசிடிவி கேமராவை அடித்து உடைத்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து அலுவலக உதவியாளர் செந்தில் கொடுத்த புகாரின் பேரில், காரைக்குடி வடக்கு காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் அப்பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்மாங்குடி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். எம்.பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



