அலைமோதும் கூட்டம்… பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடுங்க ஸார்!

பெட்ரோல் பங்க்குகளில் நிலவும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுப்படை தாக்குதல் காரணமாக வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்களுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு போல பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தி காரணமாக பெட்ரோல் பங்குகளுக்கு வாகன ஓட்டிகள் திரண்டனர். வாகனங்களுக்கு நிரப்பியது போக, கேன்களில் டீசல், பெட்ரோல் வாங்கிச் சென்றனர். இதனால் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

அத்துடன் எண்ணெய் நிறுவனங்கள் சார்பிலும், பெட்ரோல்-டீசல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினரும் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை. எனவே பொதுமக்கள் அது தொடர்பாக பீதியடைந்து பெட்ரோல் பங் க்குகளில் மொத்தமாக குவிய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், தமிழ்நாட்டில் பல இடங்களில் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதியது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் அலைமோதி வருகிறார்கள்.

இதைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்க்குகளில் கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை. வாகனங்களுக்கு தேவைப்படும் அளவுக்கு பெட்ரோல்-டீசல் இருப்பு உள்ளது. எனவே, வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் போடுவதற்கு முடிவு செய்துள்ளோம். பொதுமக்கள் கேன்களை தூக்கிக் கொண்டு பெட்ரோல் பங்க்குகளுக்கு வர வேண்டாம் என்று கூறினார்.

இந்த நிலையில் பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபிக்கு தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. பெட்ரோல் பங்க்குகளில் நிலவும் செயற்கை தட்டுப்பாடு, கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். நகர்ப்புறங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் தலா ஒரு காவலரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *