‘ஜன நாயகன்’ படக்காட்சிகள் லீக்: படக்குழு மீது சந்தேகம் எழுப்பும் பிரபல இயக்குநர்

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படக்காட்சிகள் லீக்கானதிற்கு படக்குழுவில் உள்ளவர்கள் காரணமாக இருக்கலாம் என பிரபல இயக்குநர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

நடிகர் விஜய் நடிக்கும் கடைசிபடம் என ‘ஜனநாயகன்’ அறிவிக்கப்பட்டது. ஹெச்.வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த பொங்கல் பண்டிகையன்று இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் கிடைக்காததால் இப்படம் இன்று வரை வெளியாகவில்லை. மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத்தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது.

இதனால் ‘ஜனநாயகன்’ படம் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தலைவரான நடிகர் விஜய், ‘ஜனநாயகன்’ படத்தை வெளிவராமல் கூட்டு சேர்ந்து பிரச்சினை ஏற்படுத்துவதாக பிரச்சார கூட்டங்களில் குற்றம் சாட்டி பேசி வருகிறார். இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படக்காட்சிகள் சமூக ஊடகங்களில் நேற்று (ஏப்ரல் 9) வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இப்படத்தின் காட்சிகள் எப்படி லீக்கானது என்பது குறித்து நிசப்தம் படத்தின் இயக்குநர் மைக்கேல் அருண் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ஜனநாயகன் பட காட்சிகளை லீக் செய்தவர் யாராக இருந்தாலும், அவர் கண்டுபிடிக்கப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். நிச்சயமாக இது தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் அல்ல. நிச்சயமாக இது தணிக்கை குழுவிடம்வழங்கப்பட்ட பிரதி கிடையாது.

‘எடிட் ரெஃபரன்ஸ்’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால், இது படக்குழுவில் உள்ள மிக முக்கியமான நபர்களின் தனிப்பட்ட பார்வைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாகும். எனினும் அடுத்த மீட்டிங்கில், ஜனநாயகன் படத்தின் காட்சிகளை அவர்கள் கசியவிட்டுவிட்டார்கள்… அதை யார் செய்திருப்பார்கள் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும் என்று விஜய் கூறுவார். உண்மையில், கடைசி வரை அதைச் செய்தது யார் என்பது யாருக்குமே தெரியப்போவதில்லை. ஏனெனில், இந்த ‘எடிட் ரெஃபரன்ஸ்’ நகலை அணுகும் அதிகாரம் படத்தின் எடிட்டரை தவிர்த்து தவிர்த்து, படத்தின் கதாநாயகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு மட்டுமே உண்டு.” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனால் படக்குழுவைச் சேர்ந்த யாரோ இந்த காட்சிகளை பகிர விட்டுள்ளார்களா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *