மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு… நலம் விசாரித்த ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து அவரது மகளிடம் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

சுதந்திரப்போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான ஆர்.நல்லகண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. அதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்ல கண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உடல் நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர். செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆர்.நல்ல கண்ணுவின் உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. அதனை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற வதந்தி பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று செய்தியாளர்களிடம் கூறினார். இதற்கிடையில் ஆர். நல்லகண்ணுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில் ஆர்.நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். நல்லகண்ணுவின் மகள் ஆண்டாளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *