
திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலில் உள்ள இந்தி பெயர்.
திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலில் கர்தவ்ய த்வார் என இந்தியில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மண்டல ரயில்வே மேலாளர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் கர்தவ்ய த்வார் என பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. கர்தவ்ய த்வார் என தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு புரியாத வகையில் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதில், “புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு ‘கர்தவ்ய த்வார்’ என இந்தியில் பெயர் வைத்துள்ளது தெற்கு ரயில்வே. ‘கர்தவ்ய த்வார்; என்றால் தமிழில் ‘கடமையின் நுழைவுவாயில்’ என்று பொருள். பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை இந்தி திணிப்பு” மட்டுமே. தெற்கு ரயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.



