
ஜெயராஜ். அவருடைய மகன் பென்னிக்ஸ்
தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போலீஸ் தாக்குதல்
கொரோனா தொற்று ஊரடங்கு அமலில் இருந்த போது, 2020 ஜூன்19-ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் இரவு நேரத்தில் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறி ஜெயராஜ் (58) மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) உள்ளிட்டோரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் அவர்களை போலீஸார் கொடூரமாகத் தாக்கியதுடன், தந்தை, மகன் இருவரையும் ஜூன் 20-ம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.
தந்தை, மகன் மரணம்
இந்த நிலையில், போலீஸார் நடத்திய தாக்குதல் காரணமாக ஜூன் 22-ம் தேதி பென்னிக்ஸிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவே அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து 23-ம் தேதி அவரது தந்தை ஜெயராஜும் மருத்துமனையில் உயிரிழந்தார்.தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில், மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் ஒருவர், காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் தொடர்பாக நீதிபதியிடம் சாட்சியமளித்தார்.
சிபிஐ விசாரணை
இந்த வழக்கு முதலில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.எஸ்.ஐ பால்துரை, உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன் உள்ளிட்ட 10 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

மதுரை மாவட்ட நீதிமன்றம்
தாக்குதலே மரணத்திற்கான காரணம்
ஆகவே இவ்வழக்கில் எஞ்சிய 9 காவலர்கள் மீதான வழக்கு விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வில் நடைபெற்று வந்தது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜி.முத்துக்குமரன் முன்னிலையில், ஆறு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றது. சிபிஐ தரப்பில் 50-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, பல்வேறு ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தந்தை-மகன் இருவரும் காவல் துறையினரால் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டதே அவர்களின் மரணத்திற்கு மிக முக்கிய காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
9 பேரும் குற்றவாளிகள்
இந்நிலையில், ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று (மார்ச் 23) பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் , குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மார்ச் 30 -ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



