
அமைச்சர் சேகர் பாபு
பவள விழா கண்ட பேரியக்கம், நிச்சயம் பால்வாடி இயக்கத்திற்கு தகுந்த பாடத்தை கற்பிக்கும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா சர்ச்சை பேச்சு
தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா, திமுகவிற்கு எதிராகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் குறித்து அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக மிரட்டியதால்தன் ரஜினி அரசியலுக்கு வராமல் ஒதுங்கினார் என அவர் சொன்னது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ஆதவ் அர்ஜுனா
ரஜினிகாந்த் கண்டனம்
மேலும் அதிமுக, பாஜக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையில் ஆதவ் அர்ஜுனா பேசியதில் உண்மை இல்லை என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும் என்று பதிலடி தந்தார். தனது பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனா வருத்தமும் தெரிவித்தார்.
வில்லிவாக்கத்தில் பதிலடி
இந்த நிலையில், சென்னையில் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை இன்று (மார்ச் 20) சந்தித்தார். அப்போது ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், அதிகாரம் கைக்கு வருவதற்கு முன்பே அதிகார திமிரோடும், பணம் உள்ளது என்பதால் எதையும் விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்ற மமதையோடும், பெரியவர்கள்-சிறியவர்கள் என்று பாராமல் நடந்துகொள்கிறார்கள். சமீப கால அரசியலில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் பேசலாம் என்ற நாகரீகம் தவறி, நயவஞ்சகத்தோடு சுற்றித் திரியும் கூட்டத்திற்கு வில்லிவாக்கத்தில் தகுந்த பதிலடியை திமுக கொடுக்கும்.
மனநல மருத்துவமனை
ஒரு காலத்தில் லீடர் லீடர் என்று கைகட்டி நின்றவர், இப்போது எதையும் பேசலாம் என்ற நோக்கத்தில் பேசுகிறார். இருக்கையில் கூட அமர மாட்டேன் என்று பின்னால் நின்றவர், தற்போது எங்களுடைய இயக்கத்திற்கு அறிவுப் பரிசோதனை பற்றி பேசுகிறார்.இது உண்மைதான்; அவர்கள் அறிவுப் பரிசோதனை மேற்கொள்வதற்கு சரியான இடம் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை தான்.
தக்க பாடம்
தமிழக அரசியல் களத்தில் 60 ஆண்டுகளாக கால் நகம் முளைத்தது முதல் தமிழகத்தின் கால்தடம் பதியாத இடமே இல்லை என்ற வகையில் பணியாற்றியவர் முதலமைச்சர் ஸ்டாலின். மற்ற அரசியல் தலைவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்; இந்தியாவின் இரும்பு மனிதர். அப்படிப்பட்ட எங்கள் தலைவரையும் இயக்கத்தையும் இழிவுபடுத்த நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், எங்கள் தாயே தடுத்தாலும் அவரை விடமாட்டேன் என்ற கொள்கையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவன் களத்தில் வீறுகொண்டு நிற்பான். முறையாகத் தேர்தலை சந்திக்கும் நபர், 75 ஆண்டு கால கட்சி நடத்தி பவள விழா கண்ட பேரியக்கம், நிச்சயம் பால்வாடி இயக்கத்திற்கு தகுந்த பாடத்தை கற்பிக்கும்” என்றார்.



