போற போக்கை பார்த்தால்… அதிமுகவை கிண்டல் செய்த சண்முகம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்

போற போக்கை பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். ஆனால், பாஜக மூலம் தொகுதிகளைப் பெற சில கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. இது தொடர்பாக மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேசிய அளவில் பாஜக தலைமையிலான கூட்டணியில் உள்ளோம். கூட்டணியில் மிகவும் முக்கியமான மற்றும் சென்சிட்டிவான விஷயம் எந்தெந்த தொகுதிகள் என்பதுதான். அதனால் தான் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அமமுகவிற்கு பாஜக மூலம் தொகுதிகளைப் பெறுவோம். பாஜகவின் வழிகாட்டுதலின்படி அதிமுக கூட்டணியில் இடங்களைப் பெற்று, அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் செல்வார்கள்” என்றார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சில நாட்களுக்கு முன்பு கடுமையாக விமர்சனம் செய்த டி.டி.வி.தினகரன் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில், அவர் அமமுகவிற்கு பாஜக மூலம் தொகுதிகளைப் பெறுவோம் என்று கூறியுள்ளது அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை இன்று(பிப்ரவரி 25) வெளியிட்டுள்ளார். அதில், “கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் என்று எடப்பாடி கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள். இதை பாஜகவும் மறுக்கவில்லை. போற போக்கை பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது. மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது.”என்று பதிவிட்டுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *