சிவரக்கோட்டை கண்மாயில் விடிய விடிய மண் திருட்டு…கலெக்டரிடம் பரபரப்பு புகார்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

சிவரக்கோட்டை கண்மாயில் 30 அடிக்கும் மேல் மண் அள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் புகார் மனு அளித்துள்ளது.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா சிவரக்கோட்டை கிராமத்தில் 133.32 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கரிசல் குளம் கண்மாய் மூலம் சுமார் 465 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இக்கண்மாய் நிலத்தடி நீர் மட்டத்திற்கு உதவுவதோடு, நீர் இல்லாத காலங்களில் கிணற்று நீரைப் பயன்படுத்தவும் ஆதாரமாக உள்ளது. இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக இக்கண்மாயிலிருந்து 10,000 கன மீட்டர் மண் எடுக்க மதுரை மாவட்ட ஆட்சியர் 09-01-2026 அன்று ‘சிடிஆர்& கோ’ என்ற நிறுவனத்திற்கு மூன்று மாத கால அனுமதி வழங்கியுள்ளார்.

ஆனால், இந்த அனுமதியில் விதிக்கப்பட்ட விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளதாக ராமலிங்கம் தலைமையிலான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ​இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிக்கையின்படி, ஒரு மீட்டர் ஆழத்திற்குப் பதிலாக சுமார் 30 அடி ஆழம் வரை மண் தோண்டப்பட்டுள்ளதற்கான பட ஆதாரங்கள் உள்ளன. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விடியற்காலை 5 மணி முதல் இரவு வரை மண் அள்ளப்படுகிறது.

மேலும், அனுமதிக்கப்பட்ட 3 மாத கால வரையறையைத் தாண்டியும், நிர்ணயிக்கப்பட்ட 10,000 கன மீட்டரை விட மும்மடங்கு மண்ணும் அள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 13 அடிக்கு மேல் தோண்டினால் தான் சாலைக்குத் தேவையான மண் கிடைக்கிறது என நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் வழங்கிய தேதியற்ற கடிதம், மாவட்ட ஆட்சியரின் முந்தைய ஆணை தவறானது என்பதை நிரூபிப்பதோடு பல சந்தேகங்களையும் எழுப்புகிறது.

மண் அள்ளிய ஆழமான பள்ளங்களை மீண்டும் கரம்பை மண்ணைக் கொண்டு மூடுவதால், அவை எதிர்காலத்தில் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் ஆபத்தான புதை குழிகளாக மாறும் அபாயம் உள்ளது. 13 அடிக்கும் கீழே மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதுடன், பள்ளங்களில் ஊற்றெடுக்கும் நீரால் கிராமப் பகுதிகளின் நீர் ஆதாரமும் வற்றக்கூடும். அள்ளப்பட்ட மண்ணைத் தனியார் நிலங்களில் சேமித்து வைத்து விற்பனை செய்ய முயற்சி நடப்பதாகவும், இதற்கு முறையற்ற கடிதங்கள் பயன்படுத்தப்படுவது சட்டப்படி குற்றம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ​எனவே, இந்த விதிமுறை மீறல்களால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்து நீர் வளத்தை மீட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் இன்று (மார்ச் 23) மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமாரிடம் மனு அளித்தனர். இந்த மனு அளிக்கும் போது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குழுத் தலைவர் பொ.இராஜமாணிக்கம், உறுப்பினர்கள் கா.காமேஷ் மற்றும் முனைவர் எஸ்.கிருஷ்ணசாமி, முனைவர் தினகரன், முனைவர் எழில் ஆகியோர் உடனிருந்தனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *