
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு (கட்டம்-3) ஒப்புதலையும், நிதியுதவியையும் வழங்கிட வேண்டுமென்று பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 13) கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், , ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3112 கோடி நிலுவைத் தொகையை விரைவாக விடுவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தில், குடிநீர் வசதியை மேம்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், மத்திய அரசின் நிதி உதவி கிடைப்பது அவற்றை விரைவாக செயல்படுத்த மிகவும் அவசியம் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பல பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஜல் ஜீவன் மிஷன் திட்டம் முக்கிய பங்காற்றி வருவதால், அந்தத் திட்டத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி தாமதமாகக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய திட்டமான ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் ( மூன்றாவது கட்டத்திற்கு மத்திய அரசு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். அந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதியுதவியையும் மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் குடிநீர் வசதியை மேலும் வலுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது மிகவும் அவசியம் என்றும், அதற்காக நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.



