
அண்ணாமலை
கலைஞர் கனவு இல்லம் திட்டம் குறித்த அண்ணாமலை வதந்தியை பரப்ப வேண்டாம் என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் கூறியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நேற்று (பிப்ரவரி 18) தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ” வரும் 2030-க்குள் 8 லட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்டப்படும். எளிய மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஊரக வளா்ச்சி முகமை மூலமாக 360 சதுர அடி பரப்பளவில் சமையலறை, கழிவறை வசதிகளுடன் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் ரூ. 3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டித் தரப்படுகிறது” என தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், கலைஞர் கனவு இல்ல திட்டம் என்று சொல்கிறீர்கள். ஆனால் மத்திய அரசின் திட்டம் இல்லையா? மத்திய அரசு நிதி கொடுக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். அவரின் இந்த விமர்சனத்திற்கு தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், ‘கலைஞர் கனவு இல்லம்’ ஒட்டுமொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது என்பது வதந்தி. ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம் ஒன்றிய அரசின் திட்டம், ஒன்றிய அரசு நிதி தருகிறது என்று பாஜக நிர்வாகி அண்ணாமலை பேசியுள்ளார். இது முற்றிலும் தவறான தகவல். தலா ரூ.3.50 லட்சம் செலவில் கிராமப்பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டித்தரும் வகையில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதற்கான ஒட்டுமொத்த நிதியையும் தமிழ்நாடு அரசே வழங்குகிறது. 2030-ம் ஆண்டுக்குள் ‘குடிசைகள் இல்லா தமிழ்நாடு’ என்ற இலக்குடன் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட இருக்கின்றன. தற்போதுவரை 1,71,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன, 29,000 வீடுகளின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்துக்கு ஒன்றிய அரசு நிதி அளிப்பதாக தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். வதந்தியைப் பரப்பாதீர்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



