
தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக இன்றும், (மார்ச் 13) நாளையும் (மார்ச்14) பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
இதனிடையே, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், மார்ச் 16 வரை தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.



