ஓபிஎஸ் இணைந்தால் மகிழ்ச்சி தான்: திமுக எம்.பி தங்க தமிழ்செல்வன் பேட்டி

தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்தால் மகிழ்ச்சி தான் என தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று(பிப். 21) முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். பின்னர் பேரவைக் கூட்டம் முடிந்ததும், தனி அறையில் மு.க.ஸ்டாலினை சுமார் 10 நிமிஷங்கள் சந்தித்துப் பேசினார். அப்போது மூத்த அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஒரே நாளில் இரண்டு முறை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலினை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ” ஐந்தாண்டு கால திமுக ஆட்சி சிறப்பாக நிறைவு பெற்றிருக்கிறது. அதனால் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இன்றைய அரசியல் சூழ்நிலை, கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் நிலை ஆகியவை மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவுக்கு இருப்பதைக் காட்டுகிறது” என்றார். அதற்கு முன்னதாக, ஓபிஎஸ் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினரான உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ பி. ஐயப்பன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் பேசினார். இதனால், திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ் வருவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில் ” முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரைப் பாராட்டிப் பேசியிருப்பதும், அவர் மகனுடன் சந்திப்பு நடத்தியிருப்பதும் அவர் கூட்டணிக்கு வருவதற்கான சமிக்ஞையையே காட்டுகிறது. அவர் ஒரு பழுத்த அரசியல்வாதி, ஆழ்ந்து யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளார்” என்றார். இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், “முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது” என்று இன்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம், திமுகவில் இணைந்தால் மகிழ்ச்சி தான் என தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். கம்பத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமை அவர் தொடங்கி வைத்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ,” ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர், அவர் மாற்று கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு முதலமைச்சரை வாழ்த்துவது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் கட்சியில் இணைந்தால் மிகவும் மகிழ்ச்சி தான்” என்று கூறினார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *