
தமிழ்நாட்டுக்கு இனி வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது. பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி விரைவில் வரும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் நடைபெறும் தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று (மார்ச் 17) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எம்.ஜி.ஆர் நகரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அவர் பேசுகையில், “தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விட்டது. எண்ணெய், பால் விலை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்ந்துவிட்டது. மக்கள் குடும்பம் நடத்த கஷ்டப்படும் நிலை உள்ளது. ஆனால், முதலமைச்சர் தினந்தோறும் போட்டோஷூட் நடத்துகிறார். இதுதான் திமுக அரசின் சாதனை. டாஸ்மாக்கில் ரூ.24,000 கோடி கொள்ளையடிக்கின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை
சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் வன்கொடுமை நடக்காத நட்களே இல்லை எனும் அளவுக்கு குற்றங்கள் நடக்கிறது. தமிழ்நாட்டில் உளவுத்துறை செயலிழந்துவிட்டது. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் அருகே நடைபெறும் கஞ்சா விற்பனையால் மாணவர்கள் சீரழிகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. கனிம வளங்களை கொள்ளையடிக்கின்றனர். வளர்ச்சியில் இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என ஸ்டாலின் சொல்கிறார். ஆமாம்.. கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. அனைவரையும் கடனாளி ஆக்கிவிட்டது திமுக.
தமிழகத்தில் 75 நாட்களில் 246 கொலைகள் நடந்துள்ளது. தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லை. தமிழகத்தில் ஒரு டிஜிபியை கூட நியமிக்க முடியாத நிலையில் திமுக அரசு உள்ளது. வாக்குறுதிகள் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பச்சை பொய் கூறுகிறார். நான்கில் ஒரு பங்கு வாக்கை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. 2026 ஜனவரி மாதம் நடந்த மொத்த கொலைகள் 110, பிப்ரவரி மாதம் 84, மார்ச் மாதம் 17ம் தேதி வரை 82 கொலைகள், கடந்த 75 நாட்களில் 246 கொலை நடந்துள்ளது. கொலைகள் நடக்காத நாளே இல்லை. இந்த ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து யாருக்கும் பாதுகாப்பில்லை. கடந்த ஒரு வருடத்தில் 1408 கொலைகள் நடந்துள்ளது.
மே மாதம் ஆட்சிக்கு வருவோம்
சட்டம், ஒழுங்கு பிரச்னைக்கு முக்கியக் காரணம் நிரந்தர டிஜிபி நியமிக்கவில்லை என்பதுதான். உச்சநீதிமன்றம் சொல்லியும் நியமிக்கத் திராணியற்ற அரசு திமுக அரசு. குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. ஊழல் விளம்பரம் மட்டும் செய்த திமுக ஆட்சியின் ஆட்டம் கடந்த 15- ம் தேதியோடு முடிவு கட்டப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டுக்கு இனி வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது. பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி விரைவில் வரும். இளைய சமூகத்துக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது. மே மாதம் ஆட்சிக்கு வருவோம், நல்லாட்சி கொடுப்போம்..’’ என்றார்.



