
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது தொடுக்கப்பட்ட போர் தொடர்பாக வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை தாங்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறோம். இல்லையெனில் இது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கும். சரியான நேரத்தில் அவர்களின் திட்டத்தை முறியடித்து விட்டோம். அவர்களின் அணு ஆயுத தளங்கள் அமெரிக்க முற்றிலுமாக அழித்துவிட்டது. நான் பதவியேற்ற பிறகு அமெரிக்கா பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்திருந்த நேரத்தில், ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஈரானின் அணுசக்தி பலம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று எண்ணினோம். உடனடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்கள் அனைவரும் ஈரானின் அணு செறிவூட்டும் திறன்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். அதன்படி, ஈரானின் முக்கிய தலைவர்கள் இருந்த இடங்களில் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வீழ்த்தினோம். ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளோம். முன்னதாக, ஈரானின் மின் விநியோக மையங்கள், எரிசக்தித் தளங்கள் மீது தாக்குதல் நடத்த தயாரானோம். ஆனால், அவர்கள் (ஈரான்) பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதை உணர்ந்தோம். எனவே, 5 நாள்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதில்லை என்ற முடிவை தற்காலிகமாக எடுத்துள்ளோம்” என்றார்.
இந்த நிலையில், அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் தயாராக இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி பேசுகையில்,, “ டிரம்பின் இந்த பேச்சு பொய்களால் நிரம்பியது. சமாதான பேச்சுவார்த்தை தொடர்பாக நாங்கள் எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை” என்றார்.



