
தவெக தலைவர் விஜய்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தவெகவுடன் நேயம் மக்கள் கழகம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அந்த கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு தவெக தலைவர் விஜய், 30 வேட்பாளர்களை நேற்று இரவு அறிவித்தார். இந்த நிலையில், புதுச்சேரியில் தவெகவுடன் நேயம் மக்கள் கழகம் கூட்டணி சேர்ந்துள்ளது. அந்த கட்சிக்கு தற்போது 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று (மார்ச் 23) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” புதுச்சேரி மாநிலத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நேயம் மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் ஜி.நேரு (எ) குப்புசாமி எம்எல்ஏ அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை தலைவர் விஜய் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.



