
அமெரிக்கா, ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலாகியுள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்டைகள் ஈரான் முழுவதும் உள்ள தளங்கள் மீது பிப்ரவரி 28-ம் தேதி வான்வழி தாக்குதல்களை நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் பல அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈரானில் இதுவரை 2,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க ராணுவ தரப்பில் 13 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். சுமார் 700 அமெரிக்க வீரர்கள் காயமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்நாடு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹோர்முஸ் நீரிணையை மூடிவைத்துள்ளது. இதனால், உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவும் இதனால் கடுமையாக பாதித்துள்ளது.

இந்த நிலையில், ஈரான் மீதான குண்டுவீச்சையும் தாக்குதல்களையும் இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப், ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் இருவருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
“கடந்த காலத்தில் நிலவி வந்த பல்வேறு சச்சரவுகளில் பெரும்பாலானவற்றுக்கு அமெரிக்காவும் ஈரானும் உடன்பட்டுள்ளன. இருப்பினும், இந்த இரண்டு வார கால அவகாசம் ஒப்பந்தத்தை இறுதி செய்யவும் முழுமைப்படுத்தவும் வழிவகுக்கும்,” எனத் திரு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பேச்சுவார்த்தை தொடரும் வேளையில் இஸ்ரேலும் தனது குண்டுவீச்சுத் தாக்குதல்களை நிறுத்திவைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் சிஎன்என் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து நாட்டின் கப்பல்களும் பயணிக்க அனுமதிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், தங்களது சக்திவாய்ந்த ஆயுதப் படைகள் தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்திவிடும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.அவர், ”ஈரான் ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமும், தொழில்நுட்ப வரம்புகளைக் கருத்தில் கொண்டும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இரண்டு வாரங்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து சாத்தியமாகும்” என்றார். இடைக்கால போர் நிறுத்தம் செய்ய உதவியதற்காக பாகிஸ்தானுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ள நிலையில், நிரந்தர போர் நிறுத்தத்திற்கான அமைதி பேச்சுவார்த்தை ஏப்ரல் 10-ம் தேதி இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இரண்டு வாரங்களுக்கு போர்நிறுத்த அறிவிப்பு எதிரொலியாக, 109 டாலரில் தொடங்கிய ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 91 டாலர்கள் வரை சரிந்தது. கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் சற்று நிம்மதியடைந்துள்ளன.



