
இன்ஸ்டாகிராம் பிரபலங்களாக தேவா, ஜீவா சகோதரர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘வைப் வித் ஸ்டாலின்’ நிகழ்ச்சி மூலம் இளம் தலைமுறையினை சந்தித்து தனது வாழ்க்கை மற்றும் அரசியல் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டைச் சேர்ந்த சிறுவர்கள் தேவா,ஜீவா. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாக் வித் தேவா என்ற ஐடியில், “ஹாய் காய்ஸ் நான் உங்கள் தேவா.” எனக்கூறி வெளியிடும் வீடியோக்கள் மிகவும் பிரபலம். கல்வி தொடர்பாக வீடியோ வெளியிட்ட இந்த சிறுவர்கள், ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் வரும் “அலப்பற கெளப்புறம்…” பாடல் பாடிய பின்னர் சமூக ஊடகங்களில் வெகுவேகமாக வைரலாகினர்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அசத்தி வரும் சகோதரர்கள் ஜீவா, தேவாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுடன் இருக்கும் விடியோ ஒன்றையும் தனது அதிகாரபூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,” நீங்கள் எல்லா விடியோவிலும் அனைவரையும் படிங்க.. படிங்க.. என்று சொல்றீங்க.. அதனால்தான், உங்களை இங்கு அழைத்திருக்கிறேன் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதற்கு, வருங்காலத்தில் ஆட்சியராகவும், காவல்துறை அதிகாரியாகவும் வரவேண்டும் என்று தேவாவும், ஜீவாவும் தெரிவித்தனர். ஆட்சியராகவும், காவல்துறை அதிகாரியாகவும் அடிக்கடி கோட்டைக்கு வர வேண்டும்; ஆனால், நீங்கள் அதற்கு முன்னதாகவே கோட்டைக்கு வந்து விட்டனர் என்று முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து, படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க என்று அறிவுரை வழங்கிய இந்த வீடியோ பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது.



