
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கரூரில் 41 பேர் பலி
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக ஏற்கெனவே டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சிபிஐ விசாரணை
இந்த வழக்குத் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் 19-ம் தேதி ஆஜாரக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து அன்றைய தினம் மீண்டும் அவர் ஆஜரானார். அன்று காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கி 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
சம்மன்
அதேவேளையில், இரண்டாவது முறையாக விஜய் ஆஜரானபோது சில கேள்விகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க அவரது தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதால், அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப் படலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், விஜய் நாளை (மார்ச் 10) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இணையும்படி தவெகவிற்கு ஏற்கெனவே அழைப்பு விடப்பட்டது. ஆனால், தவெக தனித்து போட்டியிடும் என்று விஜய் அறிவித்துள்ளார். இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



