
பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்.
தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் செய்த பிழையால் பெரம்பூரில் அவர் மனு நிராகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காக தேர்தல் அதிகாரிகளிடம் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களில் உள்ள முரண்பாடு காரணமாக, விஜய் வேட்புமனு நிராகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பெரம்பூரில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தன் மீது எந்தக் குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் இல்லை என விஜய் குறிப்பிட்டுள்ளார். ஆனால், திருச்சி கிழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், கடந்த 30- ம் தேதியன்று சென்னை பெரவள்ளூர் காவல்நிலையத்தில் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், “கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரையின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதவாது 30-ம் தேதி பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு தான் இந்த வழக்கு பதிவாகியிருப்பதால், பிரச்னையாக வாய்ப்பில்லை.
ஆனால், மதுரையில் கடந்த 21.08.2025 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் தலைவர் விஜய் அவர்கள் நடைமேடையில் நடந்து வரும்போது தலைவரை பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் புகார்தாரர் ஏறியதாகவும் அப்பொழுது 10 புகார்தாரரை இடிந்து தள்ளியும் அசிங்கமாக பேசியும் இடித்து தள்ளியதில் நெஞ்சுக்காயம் மற்றும் உள்காயம் ஏற்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த குற்றவழக்கு பற்றி காவல்துறையிடமிருந்து எந்தவித சம்மனோ, தகவலோ வரவில்லை. தற்போது தான் இந்த வழக்கின் விவரம் தெரிய வந்ததால், இவ்வழக்கு குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று விஜய் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்கள் எதுவும் பெரம்பூரில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இந்த தகவல்களுடன் பெரம்பூரில் புதிய பிரமாண பத்திரத்தை விஜய் தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பரிசீலனைக்கு முன்பாக இது தொடர்பான விவரங்களை விஜய் தாக்கல் செய்யாவிட்டால், அவரது வேட்புமனு பெரம்பூரில் நிராகரிக்கப்படலாம். இந்த நிலையில், ஒரு வேட்புமனுவை கூட சரியாக பதிவு செய்து தரும் வகையில் தவெக சட்டக்குழு இல்லை என இணையதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.



