
செல்வப்பெருந்தகை
சொல்லாததைச் சொன்னால், சொல்லாததை எழுதினால் நாங்கள் மான நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்வோம் என செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், ” நானும் சரி, எங்களுடைய அகில இந்திய பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் சரி, எங்க அகில இந்திய தலைமையும் கூட்டணி குறித்து தெளிவா இருக்குறோம். திமுகவுடன் கூட்டணி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தவெகவுடன் பேசுவதாக வந்ததிகளைப் பரப்புவது, கிரிஷ் சோடங்கர் சொல்வதைத் திரித்துச் சொல்வது என்று சிலர் செயல்படுகின்றனர்.
திமுக கூட்டணியில் நாங்கள் பலமாக இருக்கிறோம், பேசிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் கிரிஷ் சோடங்கர் சொல்கிறார். இதைத் திருப்பித் திருப்பி குழப்பி வருகிறார்கள் என்றால், யாராவது இனிமேல் தொலைக்காட்சியில சொல்லாததைச் சொன்னால், சொல்லாததை எழுதினால் நாங்கள் மான நஷ்ட ஈடு வழக்குப் போடுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். அந்த நிலைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள் திமுக, காங்கிரஸ் கூட்டணி என்பது வலிமையான கூட்டணி. ஐடியாலாஜிக்கல் கூட்டணி. இயற்கையான கூட்டணி. இது வெற்றிக் கூட்டணி. இதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
எந்தத் தேர்தல் வந்தாலும் பேச்சுவார்த்தை நடக்கும், முன்னப் பின்ன இருக்கும். அதிகமாக கேட்போம், அவங்க கம்மியா சொல்லுவாங்க, கடைசியில ஒரு நிலைக்கு வந்து நிறுத்தப்படும். ராகுல் காந்தியும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் ஒருங்கிணைந்து இந்தப் பணியை மேற்கொண்டு இருக்கிறார்கள். அண்ணன் தம்பி போல் சகோதரர்களாக தமிழ்நாட்டில், இந்தியாவில் பணியாற்றி வருகிறார்கள். ஆக இப்படிப்பட்ட தவறான செய்திகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், மறுக்கிறேன். கிரிஷ் சோடங்கர் , எங்கேயுமே விஜய்யின் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என சொல்லவில்லை, யாரும் சொல்லவில்லை. நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.



