அதிமுக கூட்டணிக்குள் முட்டல், மோதல்: மதுரை தெற்குத் தொகுதியில் வெற்றி யாருக்கு?

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரம் அனல் பறக்கிறது. இதில் மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக முயற்சி செய்து வருகிறது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியின் சார்பில் மதிமுகவைச் சேர்ந்த சிட்டிங் எம்எல்ஏவான மு.பூமிநாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் சுமதி, தவெக சார்பில் கோபின்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுரை அனுப்பானடியில் இருந்து மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோயில் வரை உள்ள தெற்குத் தொகுதியில் 15 வார்டுகள் உள்ளன. அதிமுகவின் பாரம்பரிய தொகுதி என்று கருதப்படும் இந்த தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை 2006,2011,2016 ஆகிய தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. இரண்டு முறை மக்கள் கலைவாணர் என்.நன்மாறன் வெற்றி பெற்றார். 2016-ல் வெற்றி பெற்ற இரா.அண்ணாதுரை, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவிடம் தஞ்சமடைந்து அதிமுகவில் ஐக்கியமாகி விட்டார்.

இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான மு.பூமிநாதன் இரண்டு முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் மூன்றாவது முறை வெற்றி பெற்றார். கடந்த 5 ஆண்டுகளாக எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல், தொகுதி மக்களிடம் நெருக்கமாக உள்ள பூமிநாதனுக்கு அவரது சமூகத்தைச் சேர்ந்த முக்குலத்தோர் வாக்குகள் ஆதரவாக உள்ளன. அத்துடன் திமுக தலைமையிலான வலுவான கூட்டணி வாக்குகள் அவர் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.எஸ்.சரவணன், தெற்கு தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்தார். ஆனால், இந்த தொகுதி பாஜக வசம் ஒப்படைக்கப்பட்டதால் மிகவும் அப்சட் ஆகியுள்ளார். சௌராஷ்டிரா சமூகத்து மக்களிடையே செல்வாக்கு பெற்ற எஸ்.எஸ்.சரவணன், எப்படியும் தொகுதியைக் கைப்பற்றலாம் என்று நினைத்தார். ஆனால், மக்களவை தேர்தலில் அதிமுகவை விட கூடுதல் வாக்குகளைப் பெற்ற பாஜகவைச் சேர்ந்த ராம ஸ்ரீனிவாசன் முட்டி மோதி இந்த தொகுதியை பாஜக வசமாக்கியுள்ளார்.

இதனால் இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்காக பல ஆண்டுகளாக களப்பணியாற்றி வந்த ஏ.ஆர்.மகாலட்சுமி மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளார். அதே போல சௌராஷ்டிரா மக்களிடையே செல்வாக்கு கொண்ட பாஜக மூத்த நிர்வாகி கே.கே.சீனிவாசன் தான் வேட்பாளர் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அவரது ஆதரவாளர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர். அதிமுக, பாஜகவில் உள்ள எதிர்ப்புகளைக் கடந்து ராம ஸ்ரீனிவாசன் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுமதி, தவெக வேட்பாளர் கோபின்சன் ஆகியோர் கணிசமான வாக்குகளைப் பெறுவதன் மூலம் ராம ஸ்ரீனிவாசனுக்கு சிக்கல் என்றே தொகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், திடீரென அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் வ.உ.சிதம்பரனார் படம் இடம் பெறவில்லை என்று வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் மீது கோபமடைந்துள்ளனர். இது தொடர்பாக அவரை தோற்கடிப்போம் என்று வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அத்துடன் பாஜகவிற்கு வாக்களிக்க கூடாது என்ற பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். இவற்றையெல்லாம் மீறி பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *