
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கோ.தளபதி எம்எல்ஏ
தொழிலாளர்கள் நிறைந்த மதுரை வடக்குத் தொகுதியில் வெற்றி பெறப்போவது அதிமுகவா, திமுகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை நகர் பகுதியில் உள்ள வடக்குத் தொகுதியில் சிட்டிங் திமுக எம்எல்ஏ தளபதி மீண்டும் களறமிங்க உள்ளார். அவரை எதிர்த்து அதிமுக டாக்டர் சரவணனை களமிறக்குகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், இந்த முறை அவ்வளவு ஈஸியாக திமுக வெற்றி பெற முடியாது என்ற சொல்லக்கூடிய தொகுதியாக வடக்கு உள்ளது.
தொகுதி நிலவரம்
மதுரை வடக்குத் தொகுதியைப் பொறுத்தவரை டி.ஆர்.ஓ.காலனி, சொக்கிகுளம், ரேஸ்கோர்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் அரசு ஊழியர்கள் நிறைந்த பகுதியாகும். இது தவிர நரிமேடு, புதூர், பீ.பீ.குளம், புதூர், உள்ளிட்ட தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். குறிப்பாக முக்குலத்தோர் மக்களும், யாதவர், சௌராஷ்டிரா, ஆதிதிராவிடர் மக்களும் அதிகம் வாழும் பகுதியாகும். அத்துடன் வணிகப் பெருமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.

விருப்ப மனு தாக்கல் செய்த கோ.தளபதி எம்எல்ஏ.
காங்கிரஸ் மோதல்
கடந்த முறை சுமார் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தளபதி இந்த முறை அவ்வளவு எளிதாக வெற்றி பெற முடியாது என்று தொகுதி மக்கள் பேசிக் கொள்கிறார். குறிப்பாக, தொடக்கத்தில் இருந்தே தளபதிக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் ஆகவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி அமைக்க கூட வலுவில்லை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்தும் எம்எல்ஏ தளபதி பேசிய பேச்சை காங்கிரஸ் கட்சிக்காரர்களை கொதிக்க வைத்தது. இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் மாநில தலைவர். செல்வப்பெருந்தகை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தளபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
கம்யூனிஸ்ட் ஏமாற்றம்
இதற்கு ஒருபடி மேலே போய், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்றும், இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் நேரில் சென்று வலியுறுத்துவேன் என்றும் பேசினார். அத்துடன் மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு வாக்களிப்பீர் என்று போஸ்டர் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில், தளபதி வடக்குத் தொகுதியில் போட்டியிடுவார் என்று நம்பப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஒருபுறம் சிக்கல் என்றால், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிக்கல் மறுபுறம் உள்ளது. கடந்த முறை தலா ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இந்த முறை தலா 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியுடன் டாக்டர் சரவணன்.
குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடைசி வரை 6 தொகுதிகள் கேட்டு போராடியது. ஆனால், தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கிய திமுக, மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியது அக்கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று வரை முகநூலில் அக்கட்சியின் அடிப்படை தொண்டரில் இருந்து முன்னாள் எம்எல்ஏ வரை திமுகவை கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியை முதலாளித்துவம் வளர விடாது என்றும், அந்த முதலாளிகள் சொல்வதைத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்கிறார் என்று வெளிப்படையாகவே விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அப்படியே கம்யூனிஸ்ட் வாக்குகள் திமுகவிற்கு செல்லுமா என்பது கேள்விக்குறித்தான்.
சௌராஷ்டிரா வாக்குகள்
தளபதியை எதிர்த்து அதிமுக சார்பில் டாக்டர் சரவணன் களமிறக்கப்படுவார் என்று கருதப்படுகிறது. மதுரைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் வந்த போது அவரை வரவேற்க வைக்கப்பட்ட பிரம்மாண்ட விளம்பரங்களும், திரண்ட மக்கள் கூட்டமும் கட்சி தலைமை மத்தியில் டாக்டர் சரவணனுக்கு பிளஸாக மாறியது. ஏற்கெனவே மதுரை மக்களுக்கு நன்கு அறிமுகமான சரவணன், தேர்தல் களம் கண்டவர்.
முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார் ஆகியோரின் உள்குத்து இல்லாவிட்டால் டாக்டர் சரவணன் ஈஸியாக கரையேறி விடுவார் என்று அதிமுகவினர் வெளிப்படையாக கூறுகின்றனர்.ஏற்கெனவே இரண்டு முறை (ஏ.கே.போஸ்.ராஜன் செல்லப்பா) அதிமுக வெற்றி பெற்ற வடக்கு தொகுதி, இந்த முறை அதிமுக வசம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே பேசப்படுகிறது. இதற்கு காரணம், சௌராஷ்டிரா மக்களின் வாக்கு வங்கி. பாஜக வசம் உள்ள இந்த வாக்குகள் பதிவாகினாலே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் டாக்டர் சரவணன் வெற்றி பெறுவார் என்று பாஜகவினர் கூறுகின்றனர். குறிப்பாக, சௌராஷ்டிரா மக்களிடம் இருக்கும் திமுக எதிர்ப்பு உணர்வு, தளபதிக்கு சிக்கலாக உள்ளது.

டாக்டர் சரவணனின் மலிவு விலை உணவகம்.
வெற்றி யாருக்கு?
திமுகவின் மகளிர் நலன் சார்ந்த திட்டங்கள் தளபதிக்கு பிளஸ் என்றால், வடக்குத் தொகுதியில் சரவணா கிச்சன், டாக்டர் சரவணனுக்கு பிளஸாக உள்ளது. மதுரை சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா ட்ரஸ்ட் இணைந்து, டாக்டர் சரவணன் ‘ மதுரை சரவணா கிச்சன்’ என்ற பெயரில் நடமாடும் மலிவு விலை உணவகங்களை நடத்தி வருகிறார். குறிப்பாக . இது ஏழை கூலித் தொழிலாளர்களின் பசியைப் போக்கும் நோக்கில், 10 ரூபாய்க்கு 3 இட்லி மற்றும் தேநீர் வழங்கும் மக்கள் சேவைத் திட்டம், பொதுமக்களிடம் பெருமளவு சென்றுள்ளது.
காலை உணவு இதுவென்றால், இரவு உணவாக 20 ரூபாய்க்கு சிக்கன் மற்றும் முட்டை பிரியாணி வழங்கப்படுகிறது. இது தவிர 10 ரூபாய்க்கு தயிர் சாதம், தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி ஆகியவை சரவணா கிச்சன் மூலம் வழங்கப்படுகிறது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்ததாக எப்போதும் மிக எளிதில் டாக்டர் சரவணனை சந்திக்க முடியும் என்று கூறும் பொதுமக்கள், ஏற்கெனவே சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதும் அவருக்கு பிளஸ் என்கிறார்கள். எனவே, மதுரையில் திமுக நெருக்கடியைச் சந்திக்கும் தொகுதிகளில் வடக்கு முக்கியமானதாகும்.



