தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணையுமா?:பியூஸ் கோயல் பேட்டி

தவெகவை எங்கள் கூட்டணியில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று பியூஸ் கோயல் கூறினார்.

திருச்சியில் இன்று நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,”பிரதமர் மோடி ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் நாட்டின் பெருமைக்காக அயராது உழைத்து வருகிறார். அவர் தமிழக மக்கள், தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழர்களின் பெருமை மீது மிகுந்த அக்கறை கொண்டவர். தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை மாற்றப்போகிறோம். தமிழகத்தில் நல்ல சட்டம் ஒழுங்கையும், ஜெயலலிதா அவர்களின் காலத்தில் இருந்தது போன்ற நல்லாட்சியையும் மீண்டும் கொண்டு வருவோம்.

எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைத்து, தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாற்றும். இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை. இது குறித்து அந்தந்த துறையினர் அவ்வப்போது விளக்கமளிப்பார்கள். நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டதும் முறைப்படி அறிவிப்போம். எடப்பாடி பழனிசாமி கூட்டணியின் தலைவராக இருந்து சரியான நேரத்தில் இது குறித்து முடிவெடுப்பார்.

தமிழக வெற்றிக் கழகத்தை எங்கள் கூட்டணியில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அவருக்கு தான் இது குறித்து நன்றாக தெரியும். தினகரன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் என அனைத்து தலைவர்களும் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தி வருகிறோம். தமிழக மக்களின் நலனுக்காக ஒரு வலுவான கூட்டணியாக தேர்தலைச் சந்திப்போம்.

திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளன. ஆனால் கட்சிகளின் எண்ணிக்கையை விட, மக்களிடம் இருக்கும் செல்வாக்கும் வாக்கு வங்கியும்தான் முக்கியம். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் மிகவும் வலுவாக உள்ளது. வரும் தேர்தலில் திமுகவைத் தோற்கடித்து முழு பெரும்பான்மையுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம்” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *