இனி இன்ஸ்டாகிராம் பார்க்க கட்டணமா?

இப்போது இன்ஸ்டாவில் இலவசமாக கிடைக்கும் அம்சங்களுக்கு விரைவில் வருகிறது விலை!

மெட்டா நிறுவனம் தற்போது ‘இன்ஸ்டாகிராம் பிளஸ்’ என்ற சந்தா திட்டத்தை வெள்ளோட்டம் விட்டிருக்கிறது. இதன் மூலம் இன்ஸ்டாகிராமின் பிரபலமான ‘ஸ்டோரீஸ்’ அம்சத்தின் பல புதிய வசதிகளுக்கு கட்டணம் விதிக்கப்பட இருக்கின்றன.

தற்போது மெக்சிகோ, ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் சோதனை அடிப்படையில் அமலில் இருக்கும் இந்தத் திட்டத்தின் மாதாந்திரக் கட்டணம், இந்திய மதிப்பில் ரூ.80 முதல் ரூ.170 வரை இருக்கலாம். ஓடிடி பாணியில் சமூக வலைதளங்களையும் இனி விலை கொடுத்த அணுக நேரிடும். இந்த கட்டணம் சந்தையின் அடிப்படையிலும் இறுதி செய்யப்பட இருக்கிறது. அதாவது இந்தியா போன்ற பெரிய சந்தையில், ஒப்பீட்டளவில் கட்டணம் குறையக்கூடும்.

‘இன்ஸ்டாகிராம் பிளஸ்’ திட்டத்தின் ஸ்டோரீஸ் அம்சத்தில் கிடைக்கும் சுவாரசியமான புதிய வசதிகள் இவைதான்:

  1. அநாமதேயமாக அடுத்தவர் ஸ்டோரீஸைப் பார்க்கலாம். அதாவது ஒருவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தனது காதலி அல்லது ’எக்ஸ்’ பதிந்திருக்கும் ஸ்டோரீஸைப் கண்டு உய்யலாம்.
  2. க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்’ என்ற அம்சத்துக்கு அப்பால், தனிப்பயன் பார்வையாளர் பட்டியல்களை உருவாக்கி அவர்களுக்கு மட்டுமே ஸ்டோரீஸை இனி பகிரலாம்
  3. ஒரு ஸ்டோரீஸை இனி 24 மணி நேரம் கூடுதலாக பார்வைக்கு வைக்கலாம்.
  4. முக்கியமான ஸ்டோரீஸை பின்(Pin) செய்யும் வசதி. இதர சமூக ஊடகங்களின் இந்த வசதி மூலம், இன்ஸ்டாவில் வாரத்திற்கு ஒரு ஸ்டோரீஸை பின் செய்து பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கலாம்.
    5.ஸ்டோரீஸை எத்தனை பேர் பார்த்தார்கள், அதிலும் குறிப்பிட்ட இந்த நபர் எட்டிப் பார்த்தாரா என்பதை திட்டவட்டமாய் அறிந்து கொள்ள உதவும் விரிவான பார்வை தரவுகள்.

ஸ்டோரீஸ் அடிப்படையிலான மேற்கண்ட அம்சங்கள் தற்போது சோதனை கட்டத்தில், குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே உள்ளன. இந்தியா உட்பட உலகளாவிய விரிவாக்கம் மற்றும் இறுதிக் கட்டணத்தை விரைவில் மெட்டா அறிவிக்க இருக்கிறது.

இன்ஸ்டாவே கதி என்று கிடைப்பவர்களிடம் கட்டணம் கறக்கும் மெட்டாவின் இந்த முயற்சி வெற்றியடைந்தால், மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை புகுத்தி சகலத்துக்கு விலை வைக்க திட்டமிட்டிருக்கிறது. இது இளம் தலைமுறையினர் இடையே இன்ஸ்டா போதையை தணிக்குமா அல்லது அவர்களை தண்டம் கட்டச் செய்யுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
– எஸ்.சுந்தர்

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *