அதிமுக வேட்பாளருக்கு பூத் ஏஜென்ட்டாக வேலை செய்வேன்: அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை!

அண்ணாமலையிடம் வாழ்த்து பெற்ற அதிமுக வேட்பாளர் அருண்குமார்.

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு பூத் ஏஜென்ட்டாக வேலை செய்வதாக அண்ணாமலை கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அதே போல அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக கட்சிகள் இதுவரை வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
தங்கள் ஆதரவாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று மேல்மட்டத் தலைவர்களிடையே எழுந்துள்ள மோதலால் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டு கட்சிகளின் மேலிடமும் தலையீடு செய்து வருகின்றன. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். பாஜக பட்டியலும் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த முறை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், கோவை வடக்கு தொகுதி மட்டும் பாஜகவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் கோவையில் போட்டியிட வேண்டும் என்று பணியாற்றி வந்த அண்ணாமலை, இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தலைமையிடம் தெரிவித்ததாக செய்தி பரவி வருகிறது. இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில், கோவை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை வரவேற்கும் தலைவர்கள் பட்டியலில் அண்ணாமலை புறக்கணிக்கப்பட்டிருந்தார். ஆனால், அந்த பட்டியலில் அண்ணாமலை பெயர் இருந்ததாகவும், அண்ணாமலை தான் மோடியை வரவேற்க வரவில்லை என்று வானதி சீனிவாசன் விளக்கம் கொடுத்தார். இந்த சூழ்நிலையில் கவுண்டம்பாளையம் தொகுதியில் உள்ள காளப்பட்டி பகுதி வாக்குச்சாவடி முகவராக செயல்பட உள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக வேட்பாளர் அருண்குமாருக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார், அண்ணாமலையை நேற்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது கோவை மாநகர மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார் மற்றும், முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். அப்போது தனது தொகுதியில் பிரச்சாரம் செய்யுமாறு அண்ணாமலையிடம் பி.ஆர்.ஜி.அருண்குமார் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அதற்கு “ஏப்ரல் 23-ம் தேதி காலையில் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டு விட்டு வாக்குச்சாவடி முகவராக (பிஎல்ஏ 2) வேலை பார்த்து மாலை வரை இருந்து முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் செல்வேன்” என்று கூறியுள்ளார். இதனால் இந்த தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார் என்று உறுதிபட உள்ளதாக தெரிகிறது. இதனால் பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *