
ஆந்திராவில் நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்கும் போது தவறி விழுந்து பள்ளி மாணவிகள் 3 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரா மாநிலம், அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் அனந்தகிரி மண்டலத்தில் மூலகும்மி அருகே நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்றாக ஹுக்கும்பேட் மண்டலம், ஜும்புவலசா கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் திரிஷா (17), ரத்னகுமாரி (16) மற்றும் பவித்ரா(16). அஞ்சலி(16) ஆகியோர் சென்றனர்.
அப்போது மாணவிகள் நான்கு பேரும் செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளனர். அப்போது நான்கு பேரும் தவறி அருவியில் விழுந்தனர். பெருக்கெடுத்த நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் திரிஷா, ரத்னகுமாரி, பவித்ரா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுயநினைவின்றி மீட்கப்பட்ட அஞ்சலி என்ற மாணவி, லுங்கபர்த்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த மாணவிகள் நான்கு பேரும் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பள்ளி இடைநிலைத்தேர்வுகளை எழுதியிருந்தனர். செல்ஃபி எடுக்கும் போது அருவியில் தவறி விழுந்து மூன்று மாணவிகள் உயிரிழந்த சம்பவம் ஜும்புவலசா கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



