சாலையோர தடுப்புச்சுவரில் பஸ் மோதி பயங்கர விபத்து: 4 பயணிகள் பலி

தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு சென்ற பேருந்து.

பெங்களூரு- மைசூரு விரைவுச்சாலையில் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு பேருந்து சென்றதில் கேரளாவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து பெங்களூருவிற்கு பிகே டிராவல்ஸ் என்ற சொகுசு பேருந்து இன்று (மார்ச் 23) அதிகாலை சுமார் 4.10 மணியளவில் சென்று கொண்டிருந்தது. இதில் 36 பயணிகளும், இரண்டு ஊழியர்களும் இருந்துள்ளனர். படுக்கை வசதி கொண்ட இந்த பேருந்து கர்நாடகா மாநிலம், ராமநகரா மாவட்டத்தில் அமைந்துள்ள பெங்களூரு- மைசூரு விரைவுச்சாலையில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு100 மீட்டர் தூரத்திற்கு அந்த பேருந்து நின்றது. இதில் பேருந்தில் இருந்த கேரளாவைச் சேர்ந்த 4 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த போலீஸார், மீட்பு படை வீரர்கள் விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் சோதனை செய்ததன் அடிப்படையில், ஓட்டுநர் பேருந்து ஓட்டும் போது உறங்கியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கேரளாவில் கோழிக்கோட்டில் உள்ள கொயிலாண்டியைச் சேர்ந்த முஹம்மது ஃபர்ஹான் (22), ரஃபீஸ் (45), ரஷீத் (45) மற்றும் மாஹேயைச் சேர்ந்த ஜாகிர் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *