
கவிஞர் வைரமுத்து
பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஞானபீட ஆய்வு மற்றும் வரலாற்று அமைப்பு கடந்த 1944-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பு சார்பில் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக கருதப்படுகிறது. 1965-ம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த சங்கர குருப் என்பவருக்கு முதல் ஞான பீட விருது வழங்கப்பட்டது. 1975-ம் ஆண்டு ‘சித்திரப்பாவை’ நாவலுக்காக அகிலன் மற்றும் 2002-ல் தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் ஞானபீட விருது பெற்றுள்ளனர். 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு 60-வது ஞானபீட விருது வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கவிப்பேரரசு என்ற அழைக்கப்படும் கவிஞர் வைரமுத்து இதுவரை 7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வென்றுள்ளார். ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்கான 2003-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். இவருக்கு 2014-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு இப்போது ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது கிடைத்தது குறித்து கவிஞர் வைரமுத்து கூறுகையில், “இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ஞானபீட விருது பெறுவதில் மகிழ்ச்சி. தமிழ்க் கவிதைக்கு ஞானபீட விருது கிடைக்கவில்லை என்ற குறை என்னால் கழிந்தது. இனி புதிய பாய்ச்சலுடன் என் இலக்கிய பணி தொடரும்” என்றார்.
ஞானபீடம் பரிசு பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது. காலையில்தான் வைரமுத்துவை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது. தமிழில் இதுவரையில் அகிலனும், ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் வைரமுத்துவின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் வைரமுத்துவை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று வைரமுத்துவை வாழ்த்துகிறேன், அவரை தமிழ்நாடே வாழ்த்துகிறது.” என்று தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்.பி. அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பலர் வைரமுத்துவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.



