
தமிழ்நாட்டில் மிகச்சிறந்த பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90.
சாலமன் பாப்பையா மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் 1936 பிப்ரவரி 22-ம் தேதி பிறந்தவர். பட்டிமன்றங்களை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே கொண்டு சேர்த்த சாலமன் பாப்பையாவின் பாமரத்தனமாக நகைச்சுவை, எளிய தமிழில் அவர் மன்றங்களை நடத்திய பாங்கும் அவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத்தந்துள்ளது.
கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய இவர் பல தமிழ் நூல்களையும், உரைகளையும் எழுதியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ‘சிவாஜி’ உள்பட பல படங்களில் பேராசிரியர் சாலமன் பாப்பையா நடித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உடனடியாக அவர், மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாலமன் பாப்பையா இன்று(செப்டம்பர் 11) காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்களும், தமிழார்வலர்களும், அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



